Top posting users this month
No user |
Similar topics
பகவான் சத்ய சாய்பாபா - பகுதி (9)
Page 1 of 1
பகவான் சத்ய சாய்பாபா - பகுதி (9)
பகவான் கிருஷ்ணர் கோகுலத்தில் நெய் திருடினார். அப்போது அவரது கையில் பட்ட வாசம், அவரது அவதாரமான பாபாவின் கைகளில் இருந்து வருவதில் விந்தை ஏதும் இல்லையே! இதை அவரது அன்னையால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாபாவை ராமலீலா ஊர்வல வண்டியில் ஏற்றிய அர்ச்சகரிடம்,""அவனை எப்படி ஏற்றினீர்கள்?'' எனக்கேட்டார் ஈஸ்வரம்மா.
""குருவை ஏற்ற என்ன தயக்கம்?'' என்று பதிலளித்தார் அவர்.
""குருவா? யாருக்கு யார் குரு?''
""அம்மா! தங்கள் மகன் இந்த ஊரில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குருவாக இருக்கிறான். அவனைத் தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளனர் அவர்கள். அவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து தான் அவனை வண்டியில் ஏற்றச் சொன்னார்கள். நானும் என்னை அறியாமலே அவனை வண்டியில் ஏற்றினேன். அப்படி ஒரு உந்துசக்தி எனக்குள் ஏற்பட்டது,'' என்றார் அர்ச்சகர்.
ஈஸ்வரம்மாவுக்கு தன் மகன் மற்ற குழந்தைகளை விட உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்பதை நினைத்து பெருமையாக இருந்தது.
குழந்தைகள் பாபாவை விரும்ப ஒரு காரணம் இருந்தது. புட்டபர்த்தியில் திண்ணைப்பள்ளிகள் மட்டும் தான் உண்டு. பெரிய படிப்பு படித்த ஆசிரியர்கள் அங்கு கிடையாது. எழுதப்படிக்கத் தெரிந்த சிலரே திண்ணைப்பள்ளிகளின் ஆசிரியர்களாக இருந்தனர்.
சூரிய உதயம் ஆனவுடனேயே வகுப்புகள் ஆரம்பித்து விடும். பாபா அப்படிப்பட்ட ஒரு பள்ளியில் தான் படித்தார். அங்கு வரும் பல குழந்தைகளின் உடம்பில் துணியே இருக்காது. அந்தளவுக்கு அவர்கள் ஏழ்மை நிலையில் இருந்தனர்.
பாபாவுக்கு ஈஸ்வரம்மா சட்டை அணிவித்து அனுப்புவார். அதிலும் புட்டபர்த்தியில் அதிகாலையில் குளிர் அதிகமாக இருக்கும். சட்டையில்லாத மாணவர்கள் குளிரில் நடுங்குவார்கள். இதைப் பார்த்து பாபா பரிதாபப்படுவார். தன் சக பள்ளித்தோழர்களுக்கு ஆடை கொடுத்தால் என்ன என்று தோன்றியது.
வீட்டில் தனக்காக வைத்திருந்த சட்டைகளையும், துண்டுகளையும் எடுத்து வந்து சகாக்களிடம் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தார். வீட்டில் எல்லாருக்கும் இது தெரியும். ஆனாலும், ""சத்யா! இப்படி செய்யலாமா? உன் ஆடைகளை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டால், நீ என்ன செய்வாய்?'' என்று கேட்க அனைவருக்கும் தயக்கம். தர்மவானாக அல்லவா அவர் வளர்கிறார். அவரது செயல்களைத் தடுக்கும் மனோதிடம் யாரிடமும் இல்லை. கீதையிலே கண்ணன் சொன்னது போல,""உலகில் எப்போது அநியாயம் தலைதூக்குகிறதோ அப்போது நான் அவதாரம் எடுப்பேன்,'' என்று சொல்லியதை நிறைவேற்ற வந்துள்ள அவதாரம் அல்லவா அவர்! அவர் இன்னும் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தப் போகிறாரோ! சிறு வயதிலேயே அவர் தர்மகாரியங்களுடன் அற்புதங்களையும் நிகழ்த்தத் தொடங்கி விட்டார்.
சத்யா திண்ணைப் பள்ளிக் கூடத்தில் அடிப்படைக் கல்வியை முடித்து ஆரம்பக் கல்விக்காக அருகிலுள்ள புக்கப்பட்டினம் என்னும் ஊருக்குச் செல்ல வேண்டிய தாயிற்று. புட்டபர்த்தியில் இருந்து ஐந்து கி.மீ., செல்ல வேண்டும். அக்காலத்தில் வாகன வசதி இல்லை. காலையில் கிளம்பும் பாபா, இருட்டிய பிறகு தான் வீட்டுக்கு வருவார். செல்லும் வழியெல்லாம் முட்புதர் அடர்ந்திருக்கும். கற்கள் குவிந்திருக்கும். ஒரு ஆற்றுக்குள் இறங்கி முட்டளவு தண்ணீரில் நடக்க வேண்டியிருக்கும். இதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. மகிழ்ச்சியுடன் சென்று வந்தார். இக்காலக் குழந்தைகளில் பலர் குறுகிய தூரத்திலுள்ள பள்ளிகளுக்குக் கூட, வாகனங்களில் செல்கிறார்கள். இவர்களெல்லாம் தினமும் பத்து கி.மீ., நடந்து பாபா படித்து வந்ததை தெரிந்து கொள்ள வேண்டும். அவரை முன்மாதிரியாகக் கொண்டு சிரமப்பட்டு படிக்க வேண்டும். அது மட்டுமல்ல! சத்யா தனக்கென்று பழைய சாதமும் ஊறுகாயும் கொண்டு வருவார். அதைக் கூட பசியென்று தன்னிடம் கேட்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விடுவார். அது மட்டுமல்ல! வெறுங்கையை அவர்களிடம் நீட்டினால் அவர்கள் கையில் விதவிதமான பண்டங்கள் வருமே! அதையும் அவர்களுக்குக் கொடுப்பார்.
மாணவர்களுக்கு ஆச்சரியம்! அவரது கையை ஆராய ஆரம்பித்தார்கள். "கையில் ஒன்றுமே இல்லை. ஆனால், பொலபொலவென பண்டம் கொட்டுகிறது. இது எப்படி?' என்பதே அந்த ஆராய்ச்சி.
இறைவனை மனிதன் என்றுமே ஆராய்ந்து தான் வந்திருக்கிறான். நாத்திகன் அவன் இருக்கிறானா என்று ஆராய்கிறான். ஆஸ்திகன் அவன் இருக்குமிடத்தையும், அங்கு சென்று அவனை எப்படியும் அடைந்து விடுவது என்பது பற்றியும் யோசிக்கிறான். ஆக, எல்லா தரப்பாருமே இறைவனை ஆராய்கிறார்கள்.
அந்தக் குழந்தைகளால் அவர் எவ்வாறு பொருட்களைத் தருகிறார் என்பது பற்றி தெரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒருவகையில் பார்த்தால், அந்தக் குழந்தைகளும் தெய்வக்குழந்தைகளே. அவர்களை நினைத்தால் ஒரு வகையில் பெருமையாகவும், மற்றொரு வகையில் பொறாமையாகவும் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் நாமும் ஒருவனாக இல்லையே என்று இன்று பாபாவின் பக்தர்களெல்லாம் சொல்கிறார்கள். இன்று அவரது காவி உடையோ, மஞ்சள் ஆடையோ, வெள்ளை உடையோ கண்ணுக்குத் தெரிந்தாலே தாங்கள் பிறந்த பலனை அடைந்து விட்டதாக கருதும் அவர்கள், பாபாவுடன் இணைந்து படித்த குழந்தைகளை நினைத்து பெருமை கொள்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஒரு கட்டத்தில் பாபாவிடமே அந்தக் குழந்தைகள் கேட்டு விட்டார்கள். ""சத்யா! நீ ஒரு வெறும் பைக்குள் கையை விடுகிறாய். ஏதேதோ பண்டங்களைத் தருகிறாய்? இது எப்படி நடக்கிறது? எப்படி இவற்றை வரவழைக்கிறாய்?''. சத்யாவின் பதிலுக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.
-தொடரும்
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» பகவான் சத்ய சாய்பாபா ( பகுதி 10)
» பகவான் சத்ய சாய்பாபா - பகுதி (5)
» பகவான் சத்ய சாய்பாபா - பகுதி - (7)
» பகவான் சத்ய சாய்பாபா - பகுதி (5)
» பகவான் சத்ய சாய்பாபா - பகுதி - (7)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum