Top posting users this month
No user |
Similar topics
உன் வாழ்க்கை உன் கையில்
Page 1 of 1
உன் வாழ்க்கை உன் கையில்
- சத்குரு ஜக்கி வாசுதேவ்
ஒவ்வொரு வடிவத்திற்கும் ஓர் அதிர்வு இருக்கிறது. அந்த அதிர்வைப் பொறுத்து அது குறிப்பிட்ட குணத்தைப் பெறுகிறது. உதாரணமாக, ஒரு கைக்குட்டையை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பிடித்திருந்தால் ஒருவிதமான அதிர்வை அது பெறுகிறது. வேறுவிதமாக பிடித்திருந்தால் வேறுவிதமான அதிர்வை பெறுகிறது. நீங்கள் சிறிது சூட்சும தன்மை வாய்ந்தவராக இருந்தால் அதை அனுபவ பூர்வமாக உணர முடியும். அதை பிடிப்பதற்கேற்றவாறு அதன் அதிர்வே மாறுகிறது. அதேபோன்று கிரகங்களுக்கும் தனித்தன்மையான அதிர்வுகள் உள்ளன. எனவே ஒரு கிரகத்தில் சில செயல்கள் நடக்கும்போது, அப்போது இருக்கும் கிரகத்தின் நிலையைப் பொறுத்து உங்கள் மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இது எப்படி என்றால், பவுர்ணமியின்போதும் அமாவாசையின்போதும் மனச்சஞ்சலம் உள்ளவர்கள் மேலும் அதிக சஞ்சலம் கொள்வதை கவனித்திருக்கிறீர்களா?
இயற்கையாகவே மனச்சஞ்சலம் உள்ளவர்கள் அந்த குறிப்பிட்ட நாட்களில் மேலும் சஞ்சலப்படுகிறார்கள். அவர்களோடு உங்களை நீங்கள் ஒப்பிட்டுக்கொண்டால், மனதளவில் நீங்கள் ஓரளவு வலிமையானவர்கள். ஆகையால்தான் நிலா எங்கிருந்தாலும் உங்களுக்குள் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. அதேநேரம் மனபலம் உள்ளவர்கள் எந்த கிரகமும் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும். அவரவர் தன்மையின்படிதான் இருப்பார்கள். கீழான சக்திகள் அவர்களை ஆளமுடியாது.
கிரகங்கள்,நட்சத்திரங்கள் இவை எல்லாம் கல், மண் போல வெறும் ஜடப்பொருள்தான் இல்லையா? ஜடப்பொருள் வலிமையானதா? அல்லது மனிதனின் தன்மை வலிமையானதா? யார் யாரை ஆள வேண்டும்? மனிதத்தன்மை உயிரற்ற பொருட்களை ஆள வேண்டுமா அல்லது உயிரற்ற பொருட்கள் மனிதத்தன்மையை ஆளவேண்டுமா? என்ற கேள்வி எழும்போது மனிதத் தன்மைதான் உயிரற்ற பொருட்களை ஆள வேண்டும் என்ற பதில் வரும். இப்படி நினைப்பவர்கள் நட்சத்திரங்கள் எங்கு வேண்டுமானாலும் போகட்டும், கிரகங்கள் எங்கு வேண்டுமானாலும் போகட்டும். நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று உறுதியாக இருப்பார்கள். அப்படி இருப்பவர்களே வாழ்க்கையை விரும்பியவாறு உருவாக்கிக் கொள்ள முடியும்.
எண் ஜோதிடம் என்பது என்ன? நமது வசதிக்காக,நமது கைவிரல்கள் கொண்டு எண்ணுவதற்காக, எண்களை நாம் உருவாக்கினோம். நமக்கு 10 விரல்கள் இருப்பதால்தான் 10 எண்கள் வந்தன. 14 விரல்கள் இருந்திருந்தால்,எட்டு, ஒன்பது, டாம், டூம் என்று 14வரை உருவாக்கியிருப்போம். இந்த எண்கள் அனைத்தும் நமது வசதிக்காக நாம் உருவாக்கிய கருவிகளே. இந்த கருவிகள் நம்மை ஆளவிடலாமா?
சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாருதி காரை விற்க முடிவெடுத்தேன். எனக்குத் தெரிந்த ஒருவரே அதை வாங்க விரும்பினார். அந்த வாகனத்தை நான் நன்கு பயன்படுத்திவிட்டதாகவும் எனவே பரிசோதித்துவிட்டு முடிவைக் கூறுமாறும் அவரிடம் கூறினேன். அதற்கு அவர்,தேவையில்லை. நீங்கள் என்றைக்கு அந்த வண்டியை வாங்கினீர்களோ, அன்றைக்கே நீங்கள் இதை விற்கும்போது நான் வாங்கவேண்டுமென்று தீர்மானித்துவிட்டேன். உங்கள் வண்டி அற்புதமான எண்ணைப் பெற்றிருக்கிறது, என்றார்.
நான் அவரிடம் சொன்னேன், ""எண் எப்படியோ இருக்கட்டும், நீங்கள் வண்டியை ஓட்டிப்பார்த்துவிட்டு, பிறகு முடிவெடுங்கள்,'' என்றேன். அதற்கு அவர், ""இல்லையில்லை. வண்டியின் எண் 333, மற்றும் என் பிறந்தநாள் 3ம் மாதத்தில் 3ம் தேதி. எனவே அன்று பகல் 11.45க்கு வந்து வண்டியை பெற்றுக் கொள்கிறேன்'' என்று கூறினார். அந்த மனிதரின் நிøயைப்பார்த்த நான், அந்த மனிதரை அப்படியே விட்டுவிட விரும்பவில்லை. வெளியில் உள்ளது கார் பதிவு எண்தான் என்றும், அது எப்போதும் மாற்றத்தக்கது என்றும், உண்மையான காரின் எண் இன்ஜினிலும் சேசிசிலும் மட்டும்தான் இருக்கும் என்று கூறினேன். இப்போது அவர் மிகவும் குழம்பிவிட்டார். தன் நியூமராலஜி குருவிடம் சென்று நடந்ததையெல்லாம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த குரு காரின் பதிவு எண் மட்டுமே போதுமானது என்று சொல்லிவிட்டார். எனவே அவர் திரும்பிவந்து அந்த எண்ணே போதுமானது என சொல்லி வண்டியை வாங்கிவிட்டார். அதற்கு விலையாக ஒரு லட்சம் கொடுப்பதாக கூறிச் சென்றார். நானும் சரி சென்று சொல்லிவிட்டேன். பிறகு அவர் எனக்கு பணமாக கொடுக்கும்போது ஒரு லட்சத்திற்கு ஒரு ரூபாய் குறைவாக கொடுக்க இருப்பதாக கூறினார். ஏனெனில் 999 என எண்கள் முடிய வேண்டுமாம். நானும் சரி என்று கூறிவிட்டேன். ஆனால் ஒரு ரூபாய் குறைத்துக் கொடுப்பது அவருக்கு மிகவும் மன உறுத்தலாக இருக்கவே, பணத்துடன் ஒரு பெரிய பரிசுப் பொருளையும் சேர்த்து கொடுத்தார். ""சரி, ஏதோ செய்துகொள்ளுங்கள். நீங்கள் வண்டியை சந்தோஷமாக எடுத்துச் சென்றால் அதுவே எனக்கு பெரிய சந்தோஷம்,'' என்று கூறிவிட்டேன்.
ஒரு நாள் அவர் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தபோது இருக்கை திடீரென பின்னால் சரிந்துவிட்டது. அவருக்கு மிகவும் பயம். ஏதோ தீய சக்தி பின்னாலிருந்து இழுத்ததாக பயந்தார். ஒரு மாதம் கழித்து தற்செயலாக அவர் வீட்டிற்கு சென்றபோது, கார் நன்றாக ஓடுகிறதா என கேட்டேன். அப்படி ஒரு தீய செயல் நடந்ததால் காரை விற்றுவிட்டதாக பதில் கூறினார். இயந்திர பழுதால்தான் இருக்கை பின்னால் போய்விட்டது என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை.
நீங்கள் எப்போதும் பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பதால்தான் ஜாதகமும் எண் ஜோதிடமும் உங்கள் வாழ்க்கையில் ஆட்சிசெய்கின்றன. அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் நீங்கள் வாழவில்லை. உங்களுக்குள் அடிப்படையாக பயம் இருக்கும்போது உங்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லி நான் நம்பவைக்க முடியும். தினமும் நீங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது உங்கள் சுண்டுவிரலை எடுத்து மூன்றுமுறை வாயில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையானால்.... என்ன நடக்கும் என்று தெரியாது. இதையே ஒரு பயமுறுத்தலுடன் இந்த செய்கைக்கு மர்மமான ஒரு விளக்கமும் கொடுத்து சொன்னால் உங்களில் பெரும்பாலானோர் நிச்சயமாக இதை செய்யத் துவங்குவீர்கள். பல சுண்டுவிரல்கள் மிகவும் சுறுசுறுப்பாகிவிடும். உங்கள் உள் தன்மையை நீங்கள் மதிப்பதில்லை. ஜடப்பொருட்களும் நீங்கள் உருவாக்கிய எண்களும்
உங்களுக்கு மிக முக்கியமானவை ஆகிவிட்டன. அவை உங்களை ஆட்சி செய்கின்றன.
உங்களுக்குள் இருக்கும் அனைத்துக்கும் மேலான ஒன்றுக்கு நீங்கள் மதிப்பளிப்பதில்லை. ஒன்று, இரண்டு, மூன்று , நான்கு .... இப்போதைக்கு உங்கள் வாழ்வில் மிக முக்கியமானவையாக மாறிவிட்டன.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum