Top posting users this month
No user |
உன் வாழ்க்கை உன் கையில்
Page 1 of 1
உன் வாழ்க்கை உன் கையில்
- சத்குர ஜிக்கி வாசுதேவ்
பெண்களை பலவீனமானவர்கள் என்று கருதுகிற வழக்கம், உலகம் முழுவதுமே உள்ளது. உடலளவில் இயற்கையாகவே ஆண்கள் கூடுதல் பலம் பொருந்தியவர்கள். அவ்வளவுதான். ஆனால், எல்லா நிலைகளிலும் பெண்களை பலவீனமானவர்களாக சித்தரிக்கும் போக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது. பெண்ணை மதிக்காத எந்த ஆணும் தன்னை உணர வழியே இல்லை. ஏனெனில், ஒவ்வொரு ஆணிலும் பெண்மையின் தன்மைகள் உண்டு.
இந்திய ஆன்மிக மரபில், தன்னை உணரும் உச்சநிலையை அடைவதில் அந்தக்காலங்களில் ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாகவே இருந்திருக்கிறார்கள். மேலே இருக்கும் தோலைத்தான் ஆண் என்றும் பெண் என்றும் அடையாளம் காண்கிறீர்கள். இயற்கையின் படைப்பில் உடலளவில் பெண்கள் பலவீனமாக கருதப்பட்டாலும், உளவியல் நிலையில் அவர்கள் மேம்பட்ட நிலையிலேயே இருக்கிறார்கள். வேதகாலம் தொட்டு எத்தனையோ பெண் துறவிகள் ஆன்மிகத்தில் மிக உயர்ந்த நிலைகளை எட்டியிருக்கிறார்கள். வழிபாட்டு முறைகளிலேயே தொன்மையான வழிபாடு தாய் வழிபாடுதான். இன்றுகூட ஆண் தெய்வங்களைக் காட்டிலும், பெண் தெய்வங்களை வழிபடுவது அதிகமாக இருப்பதற்கும் இந்த ஆதிமுறைதான் காரணம்.
வேத காலங்களில் பிராமணர்களைப் போல பெண்களும் பூணூல் அணிந்திருந்தனர். ஏனெனில், பூணூல் அணியாமல் வேதங்களையும் உபநிஷதங்களையும் பயிலக்கூடாது என்றொரு நியதி இருந்தது. அத்தகைய பெண்களில் ஒருவர் மைத்ரேயி.
ஜனக மகாராஜா தன்னுடைய அரசவையில் ஆன்மிக மாநாடு ஒன்றைக் கூட்டினார். முனிவர்களும் வேத விற்பன்னர்களும் அறிவிலும் ஆன்மிகத்திலும் உச்சம் தொட்டவர்களும் அந்த மாநாட்டில் திரண்டிருந்தனர்.
விவாதங்கள் தொடங்கின. கூரிய அறிவின் எல்லையையும் தாண்டி, சூட்சுமமான நிலையை நோக்கி விவாதங்கள் நகரத் தொடங்கின. மிக நுட்பமானநிலை நோக்கி விவாதங்கள் உயர உயர, அதன் நுணுக்கத்தைத் தாக்குப்பிடிக்க முடியாதவர்கள் மெல்ல நழுவினர். தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் மைத்ரேயி. இன்னொருவர் யக்ஞவல்கியர். ஆன்மிக விவாதங்களில் கடவுளர்களையே தோற்கடித்து கொடிநாட்டியவராகக் கருதப்பட்டவர் யக்ஞவல்கியர். அவர் ஞானத்தில் வரம்பு கண்டவர்.
அவருக்கும் மைத்ரேயிக்கும் இடையில் நாட்கணக்கில் விவாதம் நீடித்தது. ஒரு கட்டத்தில் மைத்ரேயி தொடுத்த வினாக்கள் மிகமிக சூட்சுமமாய் ஆகிவிட்ட நிலையில், அந்த வினாக்களை யக்ஞவல்கியர் பலவிதங்களில் தவிர்க்க முயன்றார். முடியாமல் போன நிலையில், தன்னை மறந்தவராக, "நிறுத்து! இதற்கு மேல் ஒரு கேள்வி கேட்டாலும் உன் உடல் துண்டு துண்டாக வெடித்து சிதறும்,' என்று கூச்சலிட்டார். உடனே ஜனகர் தலையிட்டு வாதத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார். எப்படிஎன்றால், வென்றவருக்கான சன்மானத்தை மைத்ரேயிக்கு வழங்கினார்.
தன் குறைபாட்டை புரிந்துகொண்ட யக்ஞவல்கியர் மைத்ரேயியின் பாதங்களை பணிந்து, தன்னை சீடராக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். அப்போது யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது. அவரை சீடராக ஏற்றுக்கொள்ள மைத்ரேயி மறுத்துவிட்டார். மாறாக, தன்னுடைய கணவராக ஏற்றுக்கொண்டார். காரணம், ஞானத்திலும், புரிதலிலும் மைத்ரேயிக்கு நிகராக வேறு யாருமே இல்லை. ஓரளவு நெருங்கி வந்தவர் யக்ஞவல்கியர் மட்டும்தான். இருவரும் இல்லறத்தில் இணைந்தனர்.
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு யக்ஞவல்கியர் தன்னிடம் இருக்கும் செல்வங்களை எல்லாம் மைத்ரயிவசம் ஒப்படைத்துவிட்டு, தன்னை உணர்வதற்காக வனங்களுக்குள் செல்ல முற்பட்டபோது, ""இந்த அல்பமான செல்வங்களை நான் ஏற்பேன் என்று நீங்கள் எப்படி நினைத்தீர்கள்? உள்நிலை தேடலை நானும் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். இருவரும் முழுமையான ஆன்மிக வாழ்வை மேற்கொண்டு, தம்மை உணர்ந்த ஞானியராய் வாழ்ந்தார்கள். இப்படி பண்டைய பாரதத்தில் எத்தனையோ பெண்கள் ஆன்மிகத்தில் உயர்ந்த நிலைகளை தொட்டிருக்கிறார்கள்.
கி.மு.3000ல் இருந்தே இந்தியாவில் ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமான வாழ்வை நிகழ்த்தி வந்தார்கள். மங்கோலியா, மத்திய சீனா பகுதிகளிலிருந்து வாழ்வின் சூட்சுமமான அம்சங்களை அறிந்தேயிராத அளவு கொடூரமான வாழ்க்கை வாழ்ந்தவர்களின் படையெடுப்புக்குப் பிறகுதான் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டது. ஏனெனில் படையெடுத்து வந்தவர்கள் பொன்னை அபகரிப்பது போலவே பெண்ணையும் அபகரிக்கத் தொடங்கியபிறகு, பெண் பாதுகாக்கப்பட வேண்டியவளானாள். ஆணின் பாதுகாப்புக்குள் வாழத் தொடங்கியவள் ஆணின் கட்டுப்பாடுகளுக்கு ஆளானாள். சாஸ்திரங்களும், ஸ்மிருதிகளும் மாற்றி எழுதப்பட்டன.
ஸ்மிருதிகள் வாழ்வின் அடிப்படை உண்மையை உணர்த்துபவை. அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட அந்த நூல்கள் மாற்றி எழுதப்பட்டபோது, அவற்றின் பெரும்பகுதியில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. பெண் பூணூல் அணியக்கூடாது என்பதில் தொடங்கி, அவளுக்கு மோட்சம் கிடையாது என்பதுவரை விதவிதமான வகைகளில் பலவீனமானவளாக சித்தரிக்கப்பட்டது. எல்லாம் ஒன்று என்று அத்வைதம் பேசுபவர்கள்கூட, பெண்களை 3 படி தாழ்வாகவே பார்த்தது விசித்திரம்.
வேத காலங்களில் குடும்பத்தை உருவாக்கும் சுதந்திரமும், உள்நிலையில் வளர்ந்தபிறகு குடும்பத்தை உதறும் சுதந்திரமும் பெண்களுக்கு இருந்தது. காலப்போக்கில் அவர்களுக்கு துறவறம் மறுக்கப்பட்டது. உறவோ, துறவோ, தன்வாழ்வை நிர்ணயித்துக் கொள்கிற உரிமை பெண்களின் கைகளிலிருந்து பிடுங்கப்பட்டது. இந்த 21ம் நூற்றாண்டிலும் இதே நிலை தொடர்கிறது.
உயிர்களின் பிறப்புக்கு பெரும் பங்களிப்பை பெண் தருகிறாள். அதில் ஆணின் பங்கு சிறிதளவு. எனவே பிரபஞ்ச இயக்கம் பெண்ணைச் சார்ந்துதான் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், பெண்ணை ஆண் ஏற்க மறுப்பானென்றால், அவன் அறியாமையில் இருக்க வேண்டும். ஆலயத்தில் அம்பாள் முன் விழுந்து வணங்குபவன், வீட்டில்மனைவியை அடித்து உதைத்தால் அது அறியாமை மட்டுமல்ல, அயோக்கியத்தனமும்கூட. இதற்கு மாற்று முயற்சி என்று கருதி, மேலைநாடுகளில் பெண்கள் ஆண்களைப்போல நடந்துகொள்ள முயல்கிறார்கள். இது மிகவும் ஆபாசமானது. பெண்ணாக இருப்பது தாழ்வானது என்று கருதுகிற பெண்தான், ஆணைப்போல் நடந்துகொள்ள ஆசைகொள்வாள். பெண், தன் முழுமையான பெண்மையில் முழு சுதந்திரத்துடன் வாழ்வதுதான் "பெண்விடுதலை' என்று சொல்லக்கூடியது.
விவேகானந்தரிடம் சமூக சேவகர் ஒருவர் வந்து, "பெண் விடுதலைக்கு ஆதரவாக செயல்பட விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார். "நீங்கள் ஒன்றும் செய்யாமல் விலகி வழிவிட்டாலே போதும். தங்கள் விடுதலையை பெண்களே பார்த்துக் கொள்வார்கள்,' என்றார் விவேகானந்தர்.
வாய்ப்புகளின் வாசல் திறக்கும்போது பெண்ணே தன்னை சீரமைத்துக்கொள்ளலாம். இப்போது அதற்கான சூழல் ஏற்பட்டு வருகிறது. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லாமல் இல்லை. இதையெல்லாம் பெண்கள் தாண்டி வரவேண்டும். சின்ன விஷயங்களில் எல்லாம் பெண் திருப்தியடைந்துவிடுகிறாள் என்பது காலங்காலமாய் இருக்கும் கருத்துக்களில் ஒன்று. மைத்ரேயி தன் கணவரிடம் கேட்ட கேள்வியை எல்லா பெண்களுமே கேட்கவேண்டும். வாழ்வில் பெரிய லட்சியங்களை நோக்கி பெண் நடக்கிறபோதுதான், பெண்மை எந்த விதத்திலும் தாழ்ந்ததில்லை என்பதை உலகம் உணரும்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum