Top posting users this month
No user |
Similar topics
நினைத்தாலே இனிக்கும் (5)
Page 1 of 1
நினைத்தாலே இனிக்கும் (5)
உடல் என்பது தாங்கப்படுவது. ஆத்மா என்பது தாங்குவது. ஆத்மா இருக்கும் போது, ஒரு ஆள் தனக்குத்தானே தூக்கிக் கொண்டு அலைந்த உடலை, அது போனதும் நான்கு ஆள் தாங்க வேண்டியிருக்கிறது. அதாவது, சிறியவராக (ஆத்மா) இருந்து, நம்மைத் தூக்கியவர் போய்விட்டால், நாலு ஆள் தூக்க வேண்டியிருக்கிறது. கை, கால்களை இழுத்தால் முன்பைப் போல் நேராக நிற்க மறுக்கிறது.
"வியாபக வியாப்யம்' என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். இதற்கு "நிறைந்திருத்தல்' என்று பொருள். ஆத்மா சூஷ்மமானது. பகவானும் சூஷ்ம உருவம் கொண்டவர். ஆத்மாவும் சூஷ்மம், பகவானும் சூஷ்மம் என்றால், நானும், பெருமாளும் சமமா? என்ற கேள்வி எழும். இங்கே ஒரு வித்தியாசம் இருக்கிறது. பகவான் "விபு'. அதாவது எங்கும் நிறைந்திருப்பவர். நாம் நம்மிடத்தில் மட்டுமே இருக்கிறோம்.
"அவன் எங்கும் பரந்துள்ளவன்' என்கிறார் நம்மாழ்வார். காலம் தானும் ஓடும். அது எதை எதையெல்லாம் சூழ்ந்துள்ளதோ அதையும் சேர்த்து ஓட வைக்கும். காலை 6.30 மணிக்கு மலர்ந்த பூவாக பகவானுக்கு சூட்டுகிறோம்.
8.30 மணிக்கு பார்த்தால் வாடிப் போயிருக்கிறது. இதை மாற்றியது எது? காலம்...! அதுபோல், இந்த உடம்பிலும் காலம் போகப்போக மாறுதலை ஏற்படுத்தி விடுகிறது. நேற்று 50 வயது. இன்று 24 மணி நேரம் கழிந்திருக்கிறது. இப்போது பார்த்தால் நேற்றை விட மூட்டு தேய்ந்திருக்கும், தோல் சுருங்கியிருக்கும். இப்படி சிறு வயதிலிருந்து ஒவ்வொரு நாளும் நம் உடலில் ஏற்பட்ட மாற்றத்துடன் தான், இன்றைய <உடம்பு இருக்கிறது.
பகவான் எங்கும் வியாபித்திருப்பது போல, காலம் என்ற தத்துவமும் எங்கும் பரவியுள்ளது. ஆனால், இது பூலோகத்திற்கு மட்டும் தான் பொருந்தும். காலத்திற்கு அப்பாற்பட்ட ஒரு இடம் இருக்கிறது. அதற்குப் பெயர் தான் வைகுண்டம். அங்கே, காலம் தன் வேலையைச் செய்யாது. அங்கே முதுமை உண்டாவதில்லை. தோல் சுருங்குவதில்லை.
பூமியில் ஆத்மாவை காலம் சூழ்ந்தால் உடம்பு விழுந்து விடும். அங்கே, காலத்தால் ஆத்மாவை சூழ முடியாது. ஒருவேளை சூழ்ந்தாலும், பாதிப்பு ஏற்படுவதில்லை. காலத்தால் அங்கே ஆத்மாவைத் தொட
முடிவதில்லை.
இதனால் தான் ஆழ்வார்கள், ஆத்மா வைகுந்தத்தை அடையட்டும் என்று வேண்டுகிறார்கள்.
இப்படியாக காலம் போகுது...போகுது... போகுது...போய்க்கொண்டே இருக்கிறது. ஒருவர் போய் விட்டார் என்றால், இன்னொரு குழந்தை பூமிக்கு வந்து விடுகிறது. இப்படி பிறப்பு, இறப்பு மாறி மாறி வருகிறது. இப்படியே, நாம் பிறந்து பிறந்து மாண்டு கொண்டிருந்தால் எப்படி?
ஏன் இங்கு கிடந்து மாறி மாறி சிரமப்பட வேண்டும்? இதற்கு ஒரு முடிவு வேண்டுமல்லவா! அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த உடலுக்குள் இருக்கும் ஜீவாத்மா வைகுந்தத்தை அடைய ஏதாவது
செய்தாக வேண்டுமே!
இந்த உடம்பு இருக்கிறதே! அது சின்ன வயதில் நாம் சொன்னதைக் கேட்கும். வயதாகி விட்டால், அது சொல்வதை நாம் கேட்க வேண்டியிருக்கும். சிலர் நினைப்பார்கள்.
""இந்த உடம்பை நாம் எப்படி நடத்தினால் என்ன! இதுதான் ஒருநாள் நெருப்பில் வேகப் போகிறதே!'' என்று. இங்கு தான் நாம் தவறு செய்கிறோம்.
இந்த சரீரம் சிறந்த தர்மங்களைக் கடைபிடிக்க வேண்டிய சாதனம். ஆத்மாவுக்கு தான் ஞானமுண்டு. உடம்புக்கு கிடையாது. அதனால் ஆத்மா சொல்வதை <உடல் கேட்க வேண்டும். ஆத்மா சொல்லும் சிறந்த தர்மங்களை, இந்த <உடலைக் கொண்டு கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, இது தளரும் வரை தாராளமாக உழைக்க வேண்டும். இப்படி, இந்த உடலை பத்திரமாக வைக்க வேண்டியது நம் கடமை.
அப்படி வைத்தால் தான், இந்த உடல் சொர்க்கத்துக்குப் போனால் தேவேந்திர வடிவம் எடுக்கும். நரகம் போனால்' யாதனா சரீரம்' ஆகும். பிரளய (உலகம் அழியும்) காலத்தில் மட்டும் அது பிரகிருதியுடன் மெழுகில் தங்கப்பொடி ஒட்டியது போல இருக்கும். வைகுண்டத்துக்குப் போனால் தான், பகவானுக்கு சமமான சரீரம் கிடைக்கும். அதனால் தான் பகவானின் சிலையைக் கூட "திருமேனி' என்கிறோம். அவருக்கும் அணியும் ஆபரணத்தை "திருவாபரணம்' என்று மரியாதையுடன் அழைக்கிறோம்.
பகவானின் திருமேனி நம்மைப் போல் பஞ்ச பூதங்களால் ஆனது அல்ல. பஞ்ச சக்திமயமானது. நாம், இங்கே இருக்கும் வரை தமஸ் (மந்த), சத்வம் (நல்ல), ரஜஸ் (ராட்சத)என்ற குணங்களின் கலவையானவர்கள். பகவானின் உலகத்துக்குள் போய் விட்டால், அங்கே சத்வம் மட்டும் தான்.
பகவான் எங்கும் இருக்கிறார். இங்கே இருக்கிற கடிகாரத்திலும் இருக்கிறார். தன்னைப் பற்றி தெரியாதவர்
இடத்திலும் இருக்கிறார். தன்னைப் பற்றித் தெரிந்த வசிஷ்டர் முதலானவர்களிடமும் இருக்கிறார். எல்லாருக்குள்ளும் ஒரே நேரத்தில் எப்படி இருக்கிறார்? அவர் சூஷ்மமாக (யார் கண்ணுக்கும் தெரியாமல்) இருந்தாலும், எங்கும் பரந்திருக்கிறார்.
பரந்து விரிந்துள்ள அவர் எப்படி இருப்பார் என்று ஒரு கேள்வி எல்லோருக்குள்ளும் இருக்கிறது.
கருப்பு மேகத்தை நெருப்பு விழுங்கினால் இனம்புரியாத ஒரு வர்ணமாகி விடும். அப்படி ஒரு அழகான வடிவத்துடன், நமது இருதயத்தில் கட்டை விரல் அளவுக்கு இருப்பாராம். தியானிப்பவனுக்கு மட்டுமே அவர் அனுக்கிரகம் செய்வார். அவர் எனக்குள்ளேயும் இருக்கிறார், என் நகக்கண்ணுக்குள்ளேயும் இருக்கிறார் என நினைக்கும் போது தான், அவர் நமக்குத் தெரிவார்.
அவர் எங்கும் நிறைந்துள்ளவர். அவரே என்னைத் தாங்கியுள்ளார், எனக்குள்ளும் தங்கியுள்ளார். எனக்கு முன்னே, பின்னே, பக்கவாட்டில் என எங்கும் இருக்கிறார் என தினமும் ஐந்து நிமிடமாவது நினைக்க வேண்டும். அப்படி நினைத்தால் தான், அவர் புருஷோத்தமன் (எல்லாரையும் விட உயர்ந்தவர்) என நமக்குப் புரியும்.
நமக்கு தரப்பட்டிருக்கும் 24 மணி நேரத்தில், 23 மணி நேரம் இந்த உடலைப் பற்றி நினையுங்கள்.
பிரச்னையில்லை. ஆனால், ஒரு மணி நேரமாவது, இதற்குள் இருக்கும் ஜீவாத்மா பற்றி நினையுங்கள். அதுபோய் விட்டால், இந்த உடலின் கதி என்னாகும் என்பது பற்றி சிந்தியுங்கள். இந்த ஆத்மாவை வெட்ட முடியாது, தொட முடியாது, அதற்குரிய ஒரே சிறுமை என்னவென்றால், அது எங்கும் பரந்திருக்க முடியாது.
அவரவருக்குள் மட்டும் தான் இருக்கும். இப்படியெல்லாம், ஆத்மா பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டால்,
பாவம் விலகும். மனமாசு நீங்கும். ஞானஓட்டம், தெளிவு, நல்லெண்ணம் பிறக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum