Top posting users this month
No user |
Similar topics
டாக்டருக்கு பால் பாயசம்
Page 1 of 1
டாக்டருக்கு பால் பாயசம்
தேவலோக மருத்துவரான தன்வந்திரிக்கு கேரளத்திலுள்ள சேர்த்தலை மருத்தோர் வட்டத்தில் கோயில் உள்ளது. ஓணத் திருவிழா அன்று இங்கு நடக்கும் பால்பாயாச வழிபாடு சிறப்பு மிக்கது. தல வரலாறு: நோய்குணமடைய தங்ககுடத்தில் மருந்து வழங்குபவர் தன்வந்திரி பகவான். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும் போது ஜோதி வடிவாக மஞ்சள் ஆடை தரித்து ஆபரண அலங்காரத்துடன் அமிர்தகலசத்தை கையில் ஏந்தி தோன்றியவர் இவர். ஆயுர்வேதத்தின் பிதாவாக போற்றப்படுகிறார்.நான்கு கைகளை உடைய இவருக்கு, சங்கின் நாபியைப் போல மூன்று ரேகைகள் கழுத்தில் காணப்படும். தங்க ஆபரணங்கள் அணிந்து, சுருண்ட தலைமுடியுடன் இருப்பார். தசாவாதரத்துக்குப் பிறகு 11வது அவதாரமாக ஹயக்ரீவரும், 12வது அவதாரமாக தன்வந்திரியும் தோன்றினர். வயலார் கிராமத்தைச் சேர்ந்த "தம்பான்' இனத்தை சேர்ந்த ஒருவர் பல காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டர். பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. வைக்கத்திலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வைக்கத்து அப்பன் சுவாமியை தரிசித்தார். வலி குறைந்தது. கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் வலி வந்தது. எனவே கோயிலிலேயே தங்கிவிட்டார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சிவன், "பக்தனே, இந்த கோயிலை விட்டு நீ வெளியே சென்றால் உனக்கு மறுபடியும் வலி ஏற்படும், எனவே நீ, இங்கிருந்து சேர்த்தலைக்கு சென்று அங்குள்ள "கேளம்' குளத்தில் முழ்க வேண்டும். நீருக்கு அடியில் மூன்று விக்ரகம் கிடைக்கும். முதலில் கிடைக்கும் விக்ரகம் மிகவும் சக்தி வாய்ந்ததால் அதனை குளத்திலேயே போட்டுவிடு, இரண்டாவது விக்ரகத்தை ஒரு அந்தணருக்கு தானமாக கொடு. மூன்றாவதாக விக்ரகத்தை விதிப்படி பிரதிஷ்டை செய், அப்போது உன் நோய் அகலும்,'' என்று கூறினார். அதன்படி இரண்டாவதாக கிடைத்த தன்வந்திரி விக்ரகத்தை வெள்ளுடு என்ற மனையை சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் செய்தார். அதை, நம்பூதிரி தன்னுடைய வீட்டிலேயே வைத்து பூஜை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு மண்மூசு என்பவரின் உதவியுடன் கோயில் கட்டி, தன்வந்திரியை பிரதிஷ்டை செய்தார். இவர்கள் கோவில் நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்திவந்தனர்.இவர்களுக்கு பிறகு வந்த தலைமுறையினர், கோயில் யாருக்கு சொந்தம் என்ற உரிமை பிரச்னையை எழுப்பினர். இதனால் மண்மூசு குடும்பத்தார்
விக்ரகத்தின் கையை உடைத்து எடுத்து சென்றனர். கோட்டயம் அருகிலுள்ள "ஓளச்ச' என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். வெள்ளுடு நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த விக்ரகத்தை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர். உடைந்த கையை வெள்ளியில் செய்து பொருத்தினர். இவர் மேற்கு நோக்கி, வட்ட வடிவமான கர்ப்பகிரகத்தில் காட்சி தருகிறார்.
குழந்தை பாக்கியம்: குழந்தை பாக்கியம் கிடைக்க பக்தர்கள் "சந்தான கோபாலன்' என்ற கதகளி வழிபாடு நடத்துகின்றனர். திருவோண நோன்பும், சந்தான வழிபாடும் இங்கு சிறப்பு வாய்ந்ததாகும். முக்குடி என்னும் மருந்தை 28 மூலிகைகள், பச்சை மருந்து ஆகியவற்றை தயிரில் கலந்து செய்கின்றனர். இது இந்தக் கோயிலில் முன்பதிவின் பேரில் கிடைக்கும். பூஜை செய்த மருந்தை தன்வந்திரியின் கையிலுள்ள தங்கக்குடத்தில் வைத்துள் ளனர். இதனைப் பருகுவதால் நோய்கள் குணமடைகிறது. சுவாமிக்கு வெண்ணெய், சந்தனக்காப்பும் செய்வது விசேஷம். இந்த வெண்ணெயைச் சாப்பிட்டால் அனைத்து நோய்களும் மறையும். விக்ரகத்தின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டைப்பூச்சி உள்ளது. கிருமிகள் ரத்தத்தில் இருப்பதால் அட்டை மூலம் ரத்தத்தை உறிஞ்ச வைப்பது அக்கால வழக்கம். இதைக் குறிக்கும் வகையில் தன்வந்திரியின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டை காணப்படுகிறது. "கயற்றேல் வானம்' சடங்கு: இங்கு நடக்கும் உற்சவத்தின் போது ஆஸ்துமா, வாத நோய்கள் குணமடையவும், நினைத்தவை நடக்கவும் "கயற்றேல் வானம்' என்ற பூஜை செய்யப்படுகிறது. அமாவாசைகளில் நடக்கும் பிதுர்காரிய நிழ்ச்சியின் போது, காட்டு சேப்பங்கிழங்கு கொண்டு தயாரிக்கும் "தாள்கறி' நிவேதனம் செய்யப் படுகிறது.
இந்த கிழங்கை தொட்டாலே அரிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட இதை பல மூலிகைகளுடன் சேர்த்து மருந்து செய்து உட்கொள்வதால் உடலுக்கு ஒன்றும் செய்வதில்லை. மாறாக நோய் தீர்க்கும் அருமருந்தாகிறது.
தன்வந்திரி மந்திரம்:
"ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
தந்வந்த்ரயே அம்ருத
கலசஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம.
திருவிழா: இங்கு ஓணத்தன்றும், பிற திருவோண நட்சத்திர நாட்களிலும் பால் பாயாச வழிபாடு நடக்கிறது. சித்திரை மாதம் உத்திர நட்சத்திரத்தில் பிரதிஷ்டாதினம் நடத்தப்படும். ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச துவாதசி அன்று தன்வந்திரி பகவான் அவதாரம் செய்ததாக மகாபாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நாள் தன்வந்திரி நாளாக கொண்டாடப்படுகிறது.
இருப்பிடம்: எர்ணாகுளத்திலிருந்து 40 கி.மீ.,தொலைவில் சேர்த்தலா உள்ளது. இங்கிருந்து இரண்டு கி.மீ.,தூரத்தில் உள்ள மருத்தோர்வட்டம் என்ற இடத்தில் கோயில் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 5- காலை 10.30 மணி, மாலை 5- இரவு 8 மணி.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum