Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இலங்கைத் தேர்தல்: ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்தாலென்ன?

Go down

இலங்கைத் தேர்தல்: ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்தாலென்ன? Empty இலங்கைத் தேர்தல்: ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்தாலென்ன?

Post by oviya Sun Jul 05, 2015 2:24 pm

சென்ற இதழில் குறிப்பிட்டிருந்த 'ஒன்ன பாப்போ... கோனி பில்லா' என்கிற சிங்கள வாசகத்தை கொழும்பு 'டெய்லி மிர்ரர்' வாசகர் ஒருவரின் பின்னூட்டத்தில் இருந்துதான் எடுத்தேன் - என்பதை வெளிப்படையாகச் சொன்னது தவறாகிவிட்டது.
அந்த வாசகர் சிங்கள வாசகரா" என்று, என்னுடைய அலைபேசி எண்ணைத் தேடிப்பிடித்துக் கேள்வி கேட்கிறார் ஒரு நண்பர்.

என்ன பதில் சொல்வது அவருக்கு!

ஒன்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பத்திரிகைகளுக்கு கடிதம்/மின்னஞ்சல் அனுப்பும் வாசகர்களில் பெரும்பாலானோர், புனைப் பெயர்களில்தான் அனுப்புகிறார்கள்.

இலங்கையிலும் இதே நிலைதான். பெரும்பாலான வாசகர்கள் புனைபெயர்களில்தான் எழுதுகிறார்கள். அவர்கள் எந்த இனத்தவர் என்பதை எப்படிக் கண்டறிவது?

சமீபத்தில் கூட, 'டெய்லி மிரர்' நாளேட்டில் வெளியான வாசகர் கருத்து ஒன்று என்னை வெகுவாகக் கவர்ந்தது. எப்படியாவது பிரதமர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தலைகீழாய் நிற்பதைச் சாடுகிறது அது. அதை எழுதியிருப்பவரின் பெயர் 'அமிலா'. அமிலா - என்பவர் ஆணா பெண்ணா, சிங்களவரா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

'மகிந்த ராஜபக்சேவை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஈ பே மூலம், எதிர்பார்க்கிற விலை என்னவென்பதை வெளிப்படையாக விளம்பரப்படுத்தி இலங்கையை விற்றுவிட்டுப் போய்விடுவான்' என்கிறது அமிலாவின் கடிதம் (அல்லது மின்னஞ்சல்.)

அமிலாவுக்கு பதில் அனுப்பியிருக்கிற இன்னொரு வாசகரின் கருத்து அதைக் காட்டிலும் சுவாரஸ்யமாக இருக்கிறது. 'ஈ பே மூலம் பேரம் பேசி முடிப்பவர்களுக்கு 10 சதவிகித கமிஷன் நிச்சயம்' என்கிறார் 'டீ' என்று தனது பெயரைக் குறிப்பிட்டிருக்கும் அந்த வாசகர்.

இலங்கையை எவன் வேண்டுமானாலும் விற்றுவிட்டுப் போகட்டும். அதை வாங்குபவர்களைப் பற்றி இந்தியா வேண்டுமானால் கவலைப்படலாம். நமக்கெதற்கு அந்தக் கவலை? வரலாற்றின் படியோ, வாழ்க்கை முறைகளின் படியோ, பண்பாட்டின் வழியிலோ, மொழியின் வழியிலோ இலங்கையும் ஈழமும் ஒன்றா என்ன?

இலங்கையை விற்பவன் ஈழத்தையும் சேர்த்து விற்றுவிட முடியுமென்று நினைக்கிறீர்களா? அது எம் தமிழுறவுகளின் பூர்விகத் தாய்மண்.... லட்சோப லட்சம் தமிழரின் ரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டிருக்கிற மண்.....

எம் உறவுமுறைகளின் உடல்கள் உழுது புதைக்கப்பட்ட மண்.... அந்தத் தியாகத் திருமண்ணில் ஒரே ஒரு விரலளவு நிலத்துக்குக் கூட வேறெவனும் சொந்தம் கொண்டாடிவிட முடியாது.

அந்த மண்ணின் எல்லைகள் தெள்ளத்தெளிவாக - துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன. ஆணுக்கிங்கே பெண் இணை - என்று நிறுவிய எம் இனத்தின் மாவீரர்கள், தங்கள் இன்னுயிர்களைப் பணயம் வைத்து அந்த எல்லைகளைக் காத்தனர்.

அந்த எல்லைகளுக்கு உட்பட்ட எம் மண்ணை எவன் விற்றுவிட முடியும்?

1987 இறுதியில், உலகின் உன்னதமான விடுதலைப் போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இந்தியா, இன்னொருபுறம் அந்த விடுதலை அமைப்புடன் பேரம் பேசிப் பார்த்தது.

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கோடிக்கணக்கில் பணம், அதன் தலைமைக்கு எக்கச்சக்கமான சலுகைகள் என்றெல்லாம் கவர்ச்சி வாக்குறுதிகளை வாரிவழங்கியது 'காந்தி' தேசம்...... மன்னிக்கவும்..... 'ராஜீவ்காந்தி' தேசம்!

வன்னி மண்ணின் அரசியல் சாசனத்தை எழுதும் தகுதி எந்த இயக்கத்துக்கு இருந்ததோ... இருக்கிறதோ.... அந்த இயக்கத்தை வைத்தே எமது மக்களின் அடிமை சாசனத்தை எழுதிவிடுவது என்பதில் குறியாயிருந்தார்கள், வக்கிரம் பிடித்த ராஜீவின் தோழர்கள். 'வடக்கையும் கிழக்கையும் இணைத்து உங்களை முதல்வராக்கி விடுகிறோம்' என்று பிரபாகரன் சென்னையில் இருந்தபோதே, பேரத்தைத் தொடங்கியவர்களாயிற்றே அந்த 'மேதாவிகள்'!

மணலாற்றுக்காட்டில் விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்த நேரம் அது. சுற்றிலும் இந்திய ராணுவத்தின் முற்றுகை. பிரபாகரன் இன்று கொல்லப்படுவார்.

நாளை கொல்லப்படுவார், நேற்றே கொல்லப்பட்டு விட்டார் - என்றெல்லாம் 'ஹரிபரியாக' பொய்கள் பரப்பப்பட்ட நேரம். பிரபாகரன் என்கிற விலைமதிப்பற்ற உயிருக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாதே என்று, ஒவ்வொரு தமிழனும் பதறிய நேரம்.

அந்த நிலையிலும், மணலாற்றுக் காட்டுக்குள் பதற்றமில்லாமல் உலவினான் ஒரு மனிதன். தன்னுடனிருந்த இளம் போராளிகளுக்கு அந்த முற்றுகைக்குள்ளிருந்தும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தான் அவன். 'எனக்கு ஏதாவது நேர்ந்தாலும், எனக்குப் பிறகு இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க உங்களிலிருந்தே ஒரு பிரபாகரனோ ஒரு பிரபாகரியோ வருவீர்கள்' என்று நம்பிக்கையுடன் பேசிய அந்த மனிதனின் பெயர் - வேலுப்பிள்ளை பிரபாகரன்.

ஒருகட்டத்தில், இந்தியா கொடுத்த அழுத்தங்களாலும், இந்தியா பரப்பிய பொய்ச்செய்திகளாலும், மணலாற்றுக்கு வெளியிலிருந்த பிரபாகரனின் தோழர்களே கூட, வேறுமாதிரி யோசிக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டனர்.

பிரபாவை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும்' என்கிற ஒற்றைக் கவலையுடன், இந்தியாவின் பேரத்தை ஏற்றுக் கொண்டாலென்ன - என்று கேட்டு மணலாற்று வேதாளனுக்கு செய்தி அனுப்பப்பட்டது.

சலுகைகளையும் பணத்தையும் வாரி இறைத்து இந்தியா வாங்க முயற்சிப்பது விடுதலைப் புலிகள் அமைப்பையல்ல - என்பது பிரபாகரனுக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது.

எம் இனத்தின் சுய நிர்ணய உரிமையையும் இறையாண்மையையுமே இந்தியா விலை பேசுகிறது என்கிற உண்மையை, அந்த உயிராபத்துக்கிடையிலும், தன்னுடைய 'ஸ்மார்ட் பவர்' மூலம் உணர முடிந்தது பிரபாகரனால்! பணத்துக்காகவும் சலுகைகளுக்காகவும், அப்படியொரு அடிமை சாசனத்தில் கையெழுத்திட அந்த நிலையிலும் உடன்படவில்லை அந்த மனிதன்.

"நான் செத்தபிறகு, மொத்தமாகவோ சில்லரையாகவோ இயக்கத்தையும் இனத்தையும் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம்" என்று மணலாறு என்கிற மரண வளையத்திலிருந்து பிரபாகரன் அனுப்பிய செய்தி, அடர்ந்து படர்ந்த அந்தக் கானகத்தின் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் ஊற்றிலும் அழுத்தந் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இப்போது சொல்லுங்கள் - 'இலங்கையை மொத்தமாகவோ கூறுபோட்டோ விற்க முயலும் மகிந்த ராஜபக்சேவாலோ வேறு எவராலோ வன்னி மண்ணின் மீது சுண்டுவிரலையாவது வைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

'வேலுப்பிள்ளை பிரபாகரன் வானத்தில் இருந்து குதித்து வந்தோ, மண்ணுலகில் உதித்து எழுந்தோ இந்நாட்டில் இருந்திராத இன விரிசலை ஏற்படுத்திவிடவில்லை.

உண்மையில் இந்த நாட்டில் தொன்று தொட்டு இருந்துவந்த இனவாதம் தான் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலைப் புலி பிரபாகரனாக மாற்றியது' என்று, சென்றவாரம் கொழும்பு நகரில் பௌத்த பீடம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது வெளிப்படையாகப் பேசியிருக்கிறார், மனித உரிமைகள் விஷயத்தில் தீவிர ஈடுபாடு காட்டிவரும் மனோ கணேசன்.

கொழும்பிலிருந்தும் இயங்குகிற தமிழ் அரசியல்வாதிகள் சிலரோடு ஒப்பிடுகையில், கணேசன் ஓரளவு உண்மைகளைப் பேசுபவர்தான். என்றாலும், அதை முழுமையாகப் பேசுவதில்லையே என்கிற வருத்தம் இருக்கிறது எனக்கு!

மண்ணின் மைந்தர்கள் தமிழர்கள்தான் என்பதையும், சிங்களவர்கள் வந்தேறிகள் என்பதையும் கணேசன் சொல்ல வேண்டியதில்லை. அதே சமயம், 'தொன்று தொட்டு இருந்துவந்த இனவாதம்' என்று பேசுபவர்,

'பேரினவாதத்தின் அடக்குமுறை தான் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியது' என்பதை வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டாமா? சிங்கள இனம் தொடர்ந்து அடித்தபிறகுதான், பிரபாகரன் முதலான இளைஞர்கள் திருப்பி அடித்தார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்திருக்க வேண்டாமா?

என்னுடைய இந்த ஆதங்கத்தை மிகுந்த வருத்தத்துடன்தான் பதிவு செய்கிறேன். என்றாலும், 'பிரபாகரன் மனிதனில்லை, கடவுள்' என்று வார்த்தை ஜாலம் செய்துகொண்டே, பிரபாகரனின் கொள்கைகளைக் குழிதோண்டிப் புதைக்க முயலுகிற சிலரோடு ஒப்பிடுகையில், மனோ கணேசனின் துணிவு உண்மையிலேயே வியக்க வைக்கிறது.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக ஐந்தாவது முறையாய் இலங்கை அறிவித்து ஆறு ஆண்டுகளாகிறது. அப்படி அறிவித்து இவ்வளவு ஆண்டுகள் ஆனபிறகும், 'விடுதலைப் புலிகளும் சி.ஐ.ஏ.வும் மொசாட்டும் தான் இலங்கையை ஆட்சி செய்கின்றன' என்று முந்தாநேற்று அறிவித்திருக்கிறது, சிங்கள பௌத்தர்களின் அமைப்பான பொதுபலசேனா. (விக்னேஸ்வரனைப் பார்த்து ரொம்ப பயந்துட்டாங்க போல இருக்கு!)

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், 'புலி வருது' 'புலி வருது' என்று பூச்சாண்டி காட்டும் உரிமையும், அப்பாவிச் சிங்கள வாக்காளர்களின் தலையில் மசாலா அரைக்கும் உரிமையும் மகிந்த ராஜபக்சவுக்கு மட்டுமே தாரை வார்க்கப்பட்டு விட்டதா என்ன? எவர் வேண்டுமானாலும் பூச்சாண்டி காட்டலாம், யார் வேண்டுமானாலும் மசாலா அரைக்கலாம். பொதுபலசேனாவும் அதைத்தான் செய்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு ஆகஸ்டில் தேர்தல். தேர்தலில் நின்று வென்று பிரதமராகி மைத்திரிக்கு ஆப்பு வைக்க வேண்டும் என்பது மகிந்தவின் கணக்கு. பிளவில் வால் சிக்கியிருப்பதை உணராமல் ஆப்பை அசைக்கும் குரங்கின் நிலைக்கு மகிந்தன் போய்விட மாட்டான் - என்பது மைத்திரியின் கணக்கு.

தேர்தலில் மகிந்த நின்றால், 'புலி வருது' என்பது தான் பிரதான பிரச்சாரமாக இருக்கும். மகிந்தனை வீழ்த்த, 'ஊழல் மகிந்தனிடமிருந்து நாட்டைக் காப்போம்' என்பதே மைத்திரியின் முழக்கமாக இருக்கும். இப்படியொரு நிலையில், தமிழர் தரப்பு ஒருமித்த குரலில் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் நான்.

1977 தேர்தலில், 'தனித் தமிழ் ஈழம் தான் தீர்வு - என்கிற எங்களது நிலைப்பாடு சரியென்று நினைத்தால் எங்களுக்கு வாக்களியுங்கள்' என்பதுதான் செல்வா தலைமையிலான தமிழர் தரப்பின் பிரதான முழக்கமாக இருந்தது. அதை ஏற்றுக்கொண்டுதான், வரலாறு காணாத வகையில் மகத்தான வெற்றியை அளித்தார்கள் ஈழ மக்கள். (அது, கிட்டத்தட்ட, தனித் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு!)

இப்போதும், ஒரே ஒரு அம்சத்தை முன்னிலைப்படுத்தி, ஆகஸ்ட் தேர்தலைச் சந்திக்க தமிழர் தரப்புகள் முயலலாம். 'தமிழ் இனத்துக்கு சுய நிர்ணய உரிமை இருப்பதாகக் கருதுவோர் எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று அறிவித்தே தேர்தலில் நிற்கலாம்.

இதன்மூலம், தமிழரின் சுய நிர்ணய உரிமை தொடர்பான பொது வாக்கெடுப்பாகவே இந்தத் தேர்தலை மாற்றிவிட முடியும். தமிழர்கள் என்பதற்காகவே கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளின் தியாகம், நம்மை சர்வநிச்சயமாக வெற்றி பெறச் செய்யும்.

சுயநிர்ணய உரிமையை......

தங்கள் பாதையைத் தாங்களே தீர்மானிக்கிற உரிமையை.......

தங்களைத் தாங்களே ஆள்கிற உரிமையை.......

ஒரு பொதுத்தேர்தல் மூலம் தமிழ்மக்கள் அங்கீகரிப்பது பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகுக்கக் கூடும்.

குறிப்பாக, இன அழிப்பு தொடர்பான சர்வதேச விசாரணையை முன்னெடுக்க, சுய நிர்ணய உரிமை உள்ள ஓர் இனத்துக்கு உரிமை இருப்பதாகக் கூட அறிவிக்க முடியும். அதுவே சாத்தியமாகிற நிலையில்,

சுய நிர்ணய உரிமை உள்ள ஓர் இனத்துக்கு, அந்த இனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசுக்கு, காணி உரிமையும் காவல் துறை உரிமையும் தர முடியாது என்று எவராவது உளறமுடியுமா?

'தமிழினத்துக்கு சுய நிர்ணய உரிமை இருக்கிறது - என்று கருதுவோர் எங்களுக்கு வாக்களியுங்கள்' என்று கேட்பது சட்ட விரோதமும் இல்லை. தார்மீக அடிப்படையிலான ஓர் அங்கீகாரத்தை நிலை நிறுத்துகிற இந்த முயற்சிக்கு, எந்த சக்தியாலும் தடை விதித்து விடவும் முடியாது.

சுய நிர்ணய உரிமை - என்கிற நமது பிறப்புரிமையை நிலை நிறுத்த இது சரியான தருணம் என்பதால், இந்த வாய்ப்பைத் தவற விடக் கூடாது என்று நினைக்கிறேன் நான்.

கிளிநொச்சி கரைச்சி பகுதியில், கிராம அதிகாரிகளாகத் தேர்ச்சி பெற்று, ஓராண்டுக்கு முன் பணியில் அமர்ந்த தமிழ் இளையோர் சிலருக்கு, 'உடனடியாக இராணுவத்தின் புனர் வாழ்வு முகாமில் போய்ச் சேருங்கள்' என்று உத்தரவிடப் பட்டிருக்கிற அதிர்ச்சியளிக்கிற செய்தி வெளியாகியிருக்கிற நிலையில்தான் இதை எழுதுகிறேன்.

புனர்வாழ்வு - என்கிற பெயரில் இராணுவப் பொறுக்கிகள் கொடுக்கிற 'பயிற்சிகள்' 'சித்திரவதைகள்' வடகிழக்குத் தமிழர் வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயம்.

அந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடிய முன்னாள் போராளிகளுக்கு, இழைக்கப்பட்ட அந்த அதிகாரப்பூர்வ கொடுமைகள், இப்போது அரசுப் பணியில் இருக்கிற தமிழ் இளையோரின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த இளம் கிராம அதிகாரிகளில் 4 பேர் இளம் பெண்கள் என்பதும், அவர்களில் சிலருக்குக் கைக்குழந்தைகள் இருப்பதும், கேட்கும் போதே கொதிக்க வைக்கிற தகவல்.

'படித்து அரசுத் தேர்வுகளில் அமர்ந்தவர்களுக்கே இந்தக் கதி என்றால், சாதாரண மக்களின் கதி என்ன' என்று கேட்கிறார் கிளிநொச்சி முன்னாள் எம்.பி. சிறீதரன். 'மைத்திரி அரசுக்கும் மகிந்த அரசுக்கும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை' என்கிறார் அவர்.

கணேஸ் விஜிதா, செபதாஸ் விஜிதா, செல்வராசா ரஞ்சனி, அல்பிரட் நிலக்சி, செல்வராசா சர்மிளா, விஜயநிர்மலா, குணாளினி, கோபாலசிங்கம் ஜெக ஜனனி - உள்ளிட்ட 13 கிராம அதிகாரிகளுக்கு இராணுவ 'புனர்வாழ்வு' முகாமுக்குச் செல்லும்படி ஆணையிடப்பட்டிருப்பதாக வேதனையுடன் கூறுகிறார் சிறீதரன்.

புனர்வாழ்வு - என்கிற வார்த்தையையே கேவலப்படுத்தித் தமிழினத்தைக் கொச்சைப்படுத்தும் ஒரு நாடு, அந்த நாட்டின் பொறுக்கி இராணுவத்தை எம் தாய்மண்ணிலிருந்து விலக்கிக் கொள்ள மறுக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி ஒரு தேர்தலைச் சந்திப்பது தானே சரியான பதிலடியாக இருக்க முடியும்! விக்னேஸ்வன் போன்ற தலைவர்கள் இப்படியொரு முடிவெடுத்தால், சுமந்திரர்களால் அதை எதிர்க்க முடியுமா!
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum