Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குவடார் துறைமுகம் இலங்கைக்கு ஈடாகுமா?

Go down

குவடார் துறைமுகம் இலங்கைக்கு ஈடாகுமா? Empty குவடார் துறைமுகம் இலங்கைக்கு ஈடாகுமா?

Post by oviya Sun Apr 19, 2015 3:16 pm

பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து வந்த சீனா, அதனை 40 ஆண்டுகளுக்கு முகாமைத்துவம் செய்வதற்கான உரிமையையும், பாகிஸ்தானிடம் இருந்து பெற்றுள்ளது.
இந்தியப் பெருங்கடலில், சீனாவின் போர்க்கப்பல்கள் தரித்து நின்று இளைப்பாறவும், விநியோகத் தேவைகளை நிறைவேற்றவும், கொழும்புத் துறைமுகத்தை திறந்து விடுவதற்கு, இலங்கையின் புதிய அரசாங்கம் மறுத்துள்ளதை அடுத்தே, சீனா இந்த நகர்வில் இறங்கியுள்ளது.

குவடார் துறைமுகத்தை சீனா அபிவிருத்தி செய்ய ஆரம்பித்த போதே, அது இராணுவ நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளதாக சந்தேகிக்கப்பட்டது. இப்போது அதன் நிர்வாகத்தை 40 ஆண்டுகளுக்கு சீனா தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளதன் மூலம், அந்த சந்தேகம் நியாயமானதே என்பது உறுதியாகியிருக்கிறது.

கடந்த செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில், சீன நீர்மூழ்கி ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து, தலா ஒரு வாரகாலம் தரித்து நின்று விட்டுச் சென்றிருந்தது. அது, இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல விளைவுகளுக்கும் காரணமாயிற்று.

கடந்த ஜனவரி மாதம், இலங்கையில் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சீன நீர்மூழ்கிகளுக்கு கொழும்பில் இடமளிக்க முடியாது என்று பகிரங்கமாகவே அறிவித்து விட்டது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்படப் போவதில்லை என்ற கொழும்பின் புதிய அணுகுமுறை சீனாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

அப்போதே, கொழும்பு இல்லாவிட்டாலும், மாலைதீவு அல்லது பாகிஸ்தான் துறைமுகங்களை சீன நீர்மூழ்கிகள் பயன்படுத்தலாம் என்று சீனப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் வகையில் தான், குவடார் துறைமுகத்தின் மீதான உரிமையை 40 ஆண்டுகளுக்குப் பெற்றிருக்கிறது சீனா.

இது, சீனாவின் முக்கியமானதொரு நகர்வாக கணிக்கப்படுவதற்குக் காரணம், என்ன? பாகிஸ்தானின் மேற்குப் பகுதி மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குவடார் துறைமுகத்தை, சீனாவின் மேற்குப் புற நகரான, கஸ்காருடன் தரைவழியாக இணைக்கப் போகிறது சீனா. அரபிக் கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள குவடார் துறைமுகம் வழியாக, இனிமேல் சீனா எண்ணெய் இறக்குமதியை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அந்த வழியாகவே, சீனாவினால் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுடனான வர்த்தகத்தையும் மேற்கொள்ள முடியும். மத்திய கிழக்கில் இருந்து குவடார் துறைமுகம் வழியாக எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம், 2,395 கி.மீ தூரமே பயணம் செய்து, சீனாவின் கஸ்கார் நகருக்கு அதனைக் கொண்டு செல்ல முடியும். இதுவரை சீனா 12,000 கி.மீற்றர்களைக் கப்பல் மூலம் கடந்தே அவற்றைக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

குவடார் துறைமுகத்தில் இருந்து தரைவழியாக- ரயில் மூலமோ வீதி வழியாகவோ இவற்றை எடுத்துச் செல்வதனால், 9,000 கி.மீ பயணத் தூரம் குறைகிறது. இது சீனாவுக்கு முக்கியமானதொரு அனுகூலமாகப் பார்க்கப்படுகிறது. இதேவழியாக தனது பொருட்களை சந்தைப்படுத்தவும் முடியும் என்பதால், வணிக ரீதியாக இது சீனாவுக்கு பெரிதும் கைகொடுக்கும். அதேவேளை, பாதுகாப்பு ரீதியாகவும், இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்கு ஒரு தளம் தேவைப்படுகிறது.

தனது நீர்மூழ்கிகள் தரித்து நிற்கவும், எரிபொருள் போன்ற விநியோகங்களைப் பெறுவதற்கும்- இந்தியப் பெருங்கடலில் சீனா ஒரு இடம் தேடிக் கொண்டிருந்தது. மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில், அதனைக் கருத்தில் கொண்டே, அம்பாந்தோட்டை, கொழும்புத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யத் தொடங்கியிருந்தது சீனா. அம்பாந்தோட்டை, கொழும்புத் துறைமுக அபிவிருத்தி, இராணுவ நோக்கங்களுக்கானது அல்ல என்று சீனாவும், இலங்கையின் முன்னைய அரசாங்கமும் கூறிக் கொண்டிருந்தாலும், சீனாவின் அடிப்படை நோக்கம் அதுவாகவே இருந்தது.

குவடார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து அதனை இப்போது தன் கைக்குள் போட்டுக் கொண்டதைப் போலவே, இலங்கையிலும் நகர்வுகளை மேற்கொள்ள முனைந்தது சீனா. ஆனால், ஆட்சிமாற்றம் சீனாவின் திட்டங்களைக் குழப்பிவிட்டது. இந்தநிலையில், இலங்கையின் அளவுக்கு பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இல்லாவிட்டாலும், பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை தக்கவைத்துக் கொள்வதை விட வேறு வழி சீனாவுக்கு இருக்கவில்லை.

இப்போது வர்த்தக தேவைகளுக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட குவடார் துறைமுகத்தை சீனா, தனது இராணுவ நோக்கங்களுக்கும் பயன்படுத்தப் போகிறது. அதாவது இந்தியப் பெருங்கடலின் வழியாக, ஏடன் வளைகுடா வரை சென்று ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும் சீன நீர்மூழ்கிகள் இனி, குவடார் துறைமுகத்தில் தாராளமாகவே இளைப்பாறலாம்.

அத்துடன் சீனா தனது போர்க்கப்பல்களின் ஒரு அணியைக் கூட இங்கு நிறுத்தி வைக்கலாம்.தனது நிர்வாகத்தில் உள்ள துறைமுகத்தின் பாதுகாப்புக்கு என்று அதற்குக் காரணமும் கூற முடியும். அவ்வாறு தனது கடற்படையை சீனா குவடாரில் நிறுத்தினால், அதுவே சீனா, தனது நாட்டுக்கு வெளியே அமைக்கும் முதலாவது தளமாக இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அமைதிக்காலத்தில் இதையிட்டு பெரியளவில் கவலை கொள்ள வேண்டியிராவிட்டாலும், பதற்றமான நிலையொன்றில், சீனாவின் இந்த நகர்வு கவலைக்குரிய விடயமே. மத்திய கிழக்கில் இருந்து இந்தியாவுக்கு வரும் எண்ணெய்க் கப்பல்கள் உள்ளிட்டவை, குவடார் துறைமுகம் அமைந்துள்ள அரபிக்கடல் வழியாகவே பயணம் மேற்கொள்ள வேண்டும்.

பதற்றமான ஒரு சூழலில், அது இந்தியாவின் கப்பல்களுக்கும், இந்தியாவுக்கான எண்ணெய் விநியோகத்துக்கும் ஆபத்தானது. அதேவேளை, குவடார் துறைமுகத்தில் தனது நீர்மூழ்கிகள் மற்றும் போர்க்கப்பல்களை நிறுத்திக் கொள்ளும் வசதிகள் இருப்பதால், சீனா தனது கடற்படையை, இந்தியப் பெருங்கடலில் வருங்காலத்தில் தாராளமாகவே நடமாட அனுமதிக்கும்.

அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும். என்றாலும், இலங்கையில் சீன கப்பல்கள் தரித்து நிற்பதால் ஏற்படும் அளவுக்கு, குவடார் துறைமுகத்தினால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படாது. அதேவேளை, குவடார் துறைமுகத்தில், இருந்து தரைவழியாக, தனது வடமேற்கு ஜின்ஜியாங் மாகாணத்தின் கஸ்கார் நகருக்கு பாதை அமைக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையில் சீனா ஈடுபடவுள்ளது.

வீதி மற்றும், ரயில் பாதைகளின் மூலம் மட்டுமன்றி, குழாய் வழியாகவும், இணைப்பை ஏற்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இந்த இணைப்பு ஏற்படுத்தப்படுவதற்கு இன்னும் சில ஆண்டுகளாகும் என்றாலும், சீனா அதற்கு உயர் முன்னுரிமை கொடுக்கும். குவடாரில் இருந்து கஷ்மீர் வரையான தரைவழி இணைப்பு பாகிஸ்தான் வசமுள்ள காஸ்மீர் வழியாகவே மேற்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான் வசமுள்ள ஆசாத் கஷ்மீரில் சீனா ரயில் பாதையை அமைக்கத் தொடங்கி விட்டது. இந்த இணைப்பு ஏற்படுத்துவதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. ஏனென்றால், காஸ்மீர் முழுவதும் தனக்குச் சொந்தம் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. சீனாவுடன் இணைந்து இந்தப் பாதையை அமைப்பதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலில் இருந்து கூட்டாக காஷ்மீரைப் பாதுகாக்கலாம் என்று பாகிஸ்தான் கருதுகிறது.

தனது பரம்பரை எதிரி நாடாக கருதும் பாகிஸ்தானுடன், தரைவழி இணைப்புகள் மூலம் சீனா நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதை இந்தியா விரும்பாது. அதேவேளை, குவடார் துறைமுகத்தில் சீனாவின் கால்பதிப்பானது அடுத்த நான்கு தசாப்தங்களில் இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்புச் சூழலை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அவ்வளவாக விரும்பப் போவதில்லை. அதேவேளை, குவடார் துறைமுகத்தில் இருந்து கஸ்காருக்கு தரைவழிப் பாதையை அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்தும் சீனாவின் நகர்வுக்கு இரண்டு முக்கியமான அச்சுறுத்தல்களும் சவால்களும் இருப்பதாக கருதப்படுகிறது. முதலாவது இயற்கை ரீதியானது. பொதுவாகவே குவடார் பகுதியில் உள்ள நீர் பற்றாக்குறை, இந்தப் பகுதியை விருத்தி செய்வதற்கு சீனாவுக்குத் தடையாக அமையும்.

இரண்டாவது பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல், நீண்ட தரைவழிப்பாதையை, தீவிரவாத அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பது சீனாவுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். ஒருவேளை, சீனாவை, பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குள் இது தானாகவே இழுத்து வரவும் கூடும்.

அத்தகையதொரு நிலை ஏற்பட்டால், அது சீனாவின் மீதான தீவிரவாத அச்சுறுத்தல்களை இன்னும் அதிகரிக்கச் செய்யும். எவ்வாறாயினும், குவடார் துறைமுகத்தில் சீனாவின் கால்பதிப்பு, பல புதிய மாற்றங்களுக்கு வழிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum