Top posting users this month
No user |
ஒரே நாளில் பஞ்சபூத தரிசனம்
Page 1 of 1
ஒரே நாளில் பஞ்சபூத தரிசனம்
ஒரே நாளில் காளஹஸ்தி, சிதம்பரம் உள்ளிட்ட பஞ்சபூத தலங்களைத் தரிசிப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால், விருதுநகர் மாவட்டம் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலைச் சுற்றியுள்ள தென்னக பஞ்சபூத தலங்களை ஒரேநாளில் தரிசித்து விடலாம். தேவதானம் கோயிலுக்கு குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வந்தால், இங்கு பிரசாதமாகத் தரப்படும் நாகலிங்கப்பூ பிரசாதமாக மட்டுமின்றி மருந்தாகவும் இருக்கிறது.
தல வரலாறு: சிவபக்தனான வீரபாகு பாண்டிய மன்னனுக்கும் விக்கிரமசோழனுக்கும் நீண்ட காலமாக பகை இருந்தது. விக்கிரமசோழன், பாண்டிய மன்னன் மீது பலமுறைபோர் தொடுத்தும், அவனை வெல்ல முடியவில்லை. எனவே வஞ்சகத்தால் அவனைக் கொல்ல முடிவெடுத்தான். அவனுடன் நட்பு கொள்வதாகக் கூறி, நச்சு கலந்த ஆடையை பரிசாக கொடுத்து அனுப்பினான். அந்த ஆடையை அணிந்தவர் எரிந்து சாம்பலாகி விடுவர். இறைவன் அருளால் சோழனின் சதித்திட்டத்தை பாண்டிய மன்னன் அறிந்தான். தனக்கு பரிசாக கொடுத்தனுப்பிய நச்சு ஆடையை, அதைக் கொண்டு வந்த சேவகனுக்கே போர்த்தி விட்டான். சேவகன் எரிந்து சாம்பலானான். நச்சு ஆடையை அணியவிடாமல் பாண்டியனைக் காப்பாற்றிய சிவனுக்கு, பாண்டியன் கோயில் எழுப்பினான். "நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி' என்று பெயர் சூட்டினான். இதன் பிறகு, சோழன் பார்வை இழந்தான். தன் தவறை உணர்ந்து, தனக்கு மீண்டும் பார்வை கிடைக்க, தேவதானம் வந்து பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு, சிவனை வழிபட்டான். அதன் காரணமாக விக்கிரம சோழனுக்கு தேவதானம் தலத்தில் ஒரு கண்ணுக்கு மட்டும் பார்வையை சிவன் அருளினார். மற்றொரு கண்ணுக்கும் பார்வை வேண்டும் என்று அவன் <உருக்கத்துடன் வேண்டினான். அப்போது அசரீரி ஒலித்தது. ""இன்னும் ஒரு கோயிலை இவ்வூர் அருகில் எழுப்பினால்பார்வை கிடைக்கும்'' என்றது. அதன்படி சேத்தூர் என்ற இடத்தில் கோயில் கட்டினான். பார்வையும் கிடைத்தது. நாகலிங்க பூ பிரசாதம்: குழந்தை பேறு இல்லாத பெண்கள், தலைக்கு குளித்த ஐந்தாவது நாள் தம்பதி சமேதராக கோயிலுக்கு வரவேண்டும். கோயில் வளாகத்திலுள்ள நாகலிங்க மரத்திலுள்ள மூன்று பூக்களை பறித்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர் அந்தப் பூக்களை பிரசாதமாக பெற்று சென்று பசும்பால் அல்லது மோரில் கலந்து மூன்று நாட்கள் இரவில் பருக வேண்டும். இப்படி செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். கண்பார்வை குறை தீர வழிபாடு: "கண் கெடுத்தவர்', கண் கொடுத்தவர், கொழுந்தீஸ்வரர் என மூன்று சிவன் சன்னதிகள், இங்குள்ள குன்றின் மேல் உள்ளன. இந்த சன்னதிகளை வழிபட்டால் கண் பார்வை குறை தீர்ந்து பார்வை முழுமையாக கிடைப்பதாக நம்பிக்கையுள்ளது. ஆறாத தழும்பும் ஆறும்: அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக மக்கள் நலமாக இருக்க பார்வதிதேவி பரமேஸ்வரனை நோக்கி ஊசியில் தவம் இருந்தாள். இதனால் இங்குள்ள அம்பாள் "தவமிருந்த நாயகி' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள். குன்றின் மேல் உள்ள கொழுந்தீஸ்வரரை மான் ஒன்றும், ஒரு பசுவும் வாயால் மலர்களை எடுத்து வந்து பூஜித்து வழிப்பட்டதாம். ஒரு நாள் இரண்டும் ஒரே நேரத்தில் பூஜித்த போது, தவறி போய் பசுவின் குழம்பு சுவாமியின் சிரசில் பட்டது. அந்தத்தடம் இன்றும் லிங்கத்தின் சிரசில் காணப்படுகிறது. சிலருக்கு புண் ஏற்பட்டு ஆறாத தழும்புகள் இருந்தால் பார்க்கவே கஷ்டமாக இருக்கும். இத்தகயை தழும்புகள் மறைய, கொழுந்தீஸ்வரரை 11 வாரங்கள் தொடர்ந்து பூஜித்தால் குணம் கிடைக்கும் என்கிறார்கள்.
பஞ்சபூத ஸ்தல தரிசனம்: பஞ்ச பூத ஸ்தலங்களான காஞ்சிபுரம்(நிலம்), திருவானைக்காவல் (நீர்), திருவண்ணாமலை (நெருப்பு), காளஹஸ்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்) இவற்றை ஒரே நாளில் தரிசிக்க முடியாது. ஆனால், இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள பஞ்சபூத ஸ்தலங்களான சங்கரன் கோவில் (நிலம்), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்தநல்லூர் (நெருப்பு), தென்மலை (காற்று), தேவதானம் (ஆகாயம்) இவற்றை ஒரே நாளில் தரிசிக்க முடியும். மாத சிவராத்திரிகளில் இந்த கோயில்களை வழிபடுவது மிகவும் சிறப்பு.
திருவிழா: வைகாசி மாதம் பத்து நாள் பிரம்மோற்ஸவம், விசாகத்திற்கு முதல் நாள் தேரோட்டம், மாசி மகத்தன்று தபசு, தெப்ப உற்சவம், சிவராத்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி.
இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் ரோட்டில்
ராஜபாளையத்தைக் கடந்ததும், 15வது கி.மீ., தூரத்தில் தேவதானம் உள்ளது. பஸ்ஸ்டாப்பில் இருந்து மேற்கே இரண்டு கி .மீ., தூரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் செல்லும் ரோட்டில் சென்றால் கோயிலை அடையலாம். விழா காலங்களில் ஆட்டோ, வேன்கள் இயஙகும். மற்றநாட்களில் நடந்தே செல்ல வேண்டும். ராஜபாளையத்தில் இருந்து கார்களில் வரலாம்.
திறக்கும் நேரம்: காலை 6.30- பகல் 11.30 மணி, மாலை 5- இரவு 7.15 மணி.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum