Top posting users this month
No user |
Similar topics
கங்காதேவி கோயில்
Page 1 of 1
கங்காதேவி கோயில்
தீர்த்தங்களில் கங்கைக்கு விசேஷ இடமுண்டு. காசியில் ஓடும் கங்கை, பல தலங்களில் குளமாகவும், கிணறு வடிவில் சில கோயில்களிலும் உள்ளதாக ஐதீகம். வேலூர் அருகிலுள்ள சந்தவாசலில் கங்காதேவிக்கே கோயில் உள்ளது. தீர்த்தத்திருநாளான மாசிமகத்தன்றுஇங்கு அருளும் கங்காதேவியை தரிசனம் செய்து வாருங்கள்.
தல வரலாறு: தட்ச யாகத்திற்கு பின், அம்பிகையைப் பிரிந்த சிவன் பூலோகம் வந்தார்.
உக்கிரத்துடன் இருந்த அவரது வெம்மையை, தலையில் இருந்த கங்காதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிவனை சாந்தப் படுத்தும்படி அவள் மகாவிஷ்ணுவை வேண்ட, அவரும் அவ்வாறே செய்தார். மேலும், சிவனின் உக்கிரமான பார்வையால் எரிந்த பகுதிகளைச் சுற்றிலும் ஏழு நீர் நிலைகளை உண்டாக்கி குளிரச் செய்தார். இந்தச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில், கங்காதேவிக்கு மன்னர் ஒருவர் கோயில் கட்டினார். காலப்போக்கில் இக்கோயில் மறைந்து போனது. பிற்காலத்தில், குமார கம்பணன் என்ற சிற்றரசரின் மனைவி கங்காதேவிக்கு அதே இடத்தில் கோயில் எழுப்பினார்.
தீர்த்தப் பிரசாதம்: கங்காதேவி இடதுகாலை மடித்து, வலக்காலை தொங்கவிட்டபடி, ஐந்துதலை நாகத்தின் கீழ் அமர்ந்திருக்கிறாள். கீழே சிம்ம வாகனம் இருக்கிறது. கைகளில் தண்டம், உடுக்கை மற்றும் அமுத கலசம் உள்ளது. பிரதான அம்பிகைக்குப் பின்புறம் அம்பிகையின் சுதை சிற்பமும் வடித்துள்ளனர். தீர்த்தவழிபாட்டிற்கு முக்கியத்துவம் உள்ள தீபாவளி, மாசி மகம் ஆகிய நாட்களில் இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும். அபிஷேக தீர்த்தத்தையே பிரசாதமாகத் தருகின்றனர். இதை செம்பில் வாங்கிச்சென்று பூஜையறையில் வைத்துக் கொள்ள செல்வவளம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
சுமங்கலி பூஜை: சித்திரை முதல் நாளில் அம்பிகைக்கு 108 பால் குட அபிஷேகம் நடக்கும். அன்று பக்தர்களே சன்னதிக்குள் சென்று, அம்பிகைக்கு பூஜை செய்யலாம். ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சுமங்கலி ஹோமம் நடக்கும். அன்று பக்தைகளுக்கு ஒன்பது மங்கலப்பொருட்களை பிரசாதமாகத் தருவர். பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடக்கும். உற்சவ அம்பிகைக்கு தனி சன்னதி உள்ளது. பவுர்ணமியன்று கங்காதேவி கோபுரம் முன் எழுந்தருளுவாள். இதற்கு முன் இங்கு பெருமாளுக்கு கோயில் இருந்ததன். அடையாளமாக, கோயில் முகப்பில் ஒரு தீபஸ்தம்பம் உள்ளது. இதில் சங்கு, சக்கரம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.
துணி முடிதல் வழிபாடு: திருமணத்தடை, புத்திரதோஷம் உள்ளவர்கள் இங்கு அம்பிகைக்கு "துணி முடிதல்' என்ற வழிபாட்டைச் செய்கின்றனர். மஞ்சள் துணியில் காணிக்கை கட்டி, அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். அதை கோயிலிலேயே கொடுத்துவிட்டு, சென்று விடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும், மீண்டும் இங்கு வந்துதுணி முடிப்பை வாங்கி காணிக்கையைச் செலுத்துகின்றனர். மாங்கல்ய பாக்கியத்திற் காக அம்பிகைக்கு தாலி அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். குரு, சனி, ராகு கேது பெயர்ச்சி நேரத்தில் இங்குள்ள நவக்கிரக சன்னதியில் விசேஷ ஹோமம் நடக்கும்.
விஷ்ணு தீபம்: கோயிலுக்குப் பின்புறம் ராஜகம்பீர மலை உள்ளது. பூலோகம் வந்த சிவன், முதலில் இந்த மலையிலும், அடுத்து திருவண்ணாமலையிலும் பாதம் பதித்தார். இதற்கு "மிதிமலை' என்று பெயர். மலையில் சிவன் பாதம் வைத்ததாகக் கருதப்படும் இடத்தில் சிவபாதம் உள்ளது. திருக்கார்த்திகைக்கு மறுநாள் கைசிக (விஷ்ணு) கார்த்திகையன்று இந்த மலையில் தீபத்திருவிழா நடக்கும்.
இருப்பிடம்: திருவண்ணாமலை- வேலூர் ரோட்டில் 50 கி.மீ., தூரத்தில் சந்தவாசல் உள்ளது.பஸ் ஸ்டாப்பில் இருந்து படவேடு செல்லும் வழியில் ஒரு கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ உண்டு.
திறக்கும் நேரம்: காலை 6- 10.30 மணி, மாலை 4.30- 8.30 மணி. வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி வரை.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum