Top posting users this month
No user |
குறைகளை இங்கே (சொல்லலாம்) எழுதலாம்
Page 1 of 1
குறைகளை இங்கே (சொல்லலாம்) எழுதலாம்
குறைகளைத் தாளில் எழுதி இறைவன் முன்னால் வைத்து, அது தீர வேண்டுமென வழிபடும் தலம் கோயம்புத்தூர் மாவட்டம் இடிகரையில் உள்ளது. இங்குள்ள இறைவன் வில்லீஸ்வரர் எனப்படுகிறார்.
தல வரலாறு: கரிகாற்சோழமன்னன் தனது நாடு சிறக்கவும், புத்திரதோஷம் நீங்கவும் குறத்தி ஒருத்தியின் ஆலோசனைப்படி கொங்குநாட்டில் 36 சிவாலயங்கள் கட்டினான். 29 வது கோயிலை வில்வமரங்கள் நிறைந்த இவ்விடத்தில் எழுப்புவதற்காக, வில்வமரங்களை வெட்டி காடுகளைத் திருத்தினான். அப்போது அங்கு காவல் தெய்வமாக இருந்த துர்க்கை பத்திரகாளியம்மன், தனக்கு பலி கொடுத்து விட்டு பின் ஆலயம் எழுப்பும்படி கூறினாள். ஒப்புக் கொண்ட மன்னர் துர்க்கைக்கு தனியே கோயில் ஒன்றை எழுப்புவதாக வாக்களித்தார்.
ஓரிடத்தில் பூமியைத் தோண்டிய போது, சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அதை சிவன் கோயிலில் அவன் பிரதிஷ்டை செய்தான். பின், ஊர் எல்லையில் துர்க்கைக்கு கோயில் எழுப்பினான். இவள் வில்லி துர்க்கை எனப்பட்டாள். சிவனுக்கு வில்லீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அம்பாளுக்கும் சன்னதி எழுந்தது. அவள் வேதவல்லி எனப்பட்டாள்.
சிறப்பம்சம் : சிவலிங்கத்தின் நெற்றியில் மூன்று நேர்கோடுகள் உள்ளன. ஆவணி 14, 15, 16 தேதிகளில் சூரியன் தனது கதிர்களை இந்த லிங்கத்தின் மீது பரப்பி பூஜை செய்கிறார். இங்குள்ள நவக்கிரகங்கள் தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் அமைந்துள்ளது சிறப்பாக உள்ளது. பக்தர்கள் தங்கள் குறைகளை ஒரு காகிதத்தில் குறைகளை எழுதி அர்ச்சகரிடம் சமர்ப்பிக்கின்றனர். அவர் அதை லிங்கத்தின் முன்னால் வைக்கிறார். அந்தக்குறை முப்பது நாட்களில் தீர்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். புராதனமான இந்தக் கோயிலில் கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இத்தல விநாயகர் சாந்த விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோயில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி அரணாக அமைந்துள்ள குருடி மலை, பாலமலை, பொன்னூத்து மலைகளில் பெய்யும் மழைநீர் வழிந்தோடி வரும் இரண்டு ஓடைகளின் கரைகளுக்கு நடுவே இவ்வூர் அமைந்துள்ளது. இதனால் இவ்வூர் ஆதியில் "இருகரை' என்றழைக்கப்பட்டது. அதுவே மருவி நாளடைவில் "இடிகரை' ஆயிற்று. வில்லீஸ்வரருக்கு இடப்புறம் முகப்பில் மிகச்சிறிய நந்தியுடன் வேதநாயகி அம்பாள், பாலசுப்பிரமணியர் ஆகியோர் தனி சன்னதிகளில் உள்ளனர். பிரகாரத்தில் விழுதுகள் இல்லாத கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்புரிகிறார்.
சுரங்கப்பாதை: ராமபிரான் இத்தலத்திற்கு வந்து சிவனிடம் வில் பெற்றுச் சென்றார் என்பதாலும், வில்வவனத்தில் இருந்து கிடைத்த சிவலிங்கம் என்பதாலும், வில்லை ஆயுதமாகக் கொண்ட வேட்டை சமுதாய மக்களால் வணங்கப்பட்ட சிவன் என்பதாலும் சிவனுக்கு "வில்லீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. ராமர் இங்கு அடையாளமாக இவ்வூர் அருகேயுள்ள கோவிந்தநாயக்கன்பாளையத்தில் கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது.
திறக்கும் நேரம் : காலை 8- 10 மணி, மாலை 6-7.30 மணி.
இருப்பிடம் : கோவை காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்திலுள்ள துடியலூரில் இறங்கி, அங்கிருந்து 3 கி.மீ., தூரத்திலுள்ள இடிகரைக்கு மினிபஸ்சில் செல்லலாம்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum