Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தரணி போற்றும் தஞ்சாவூர்

Go down

தரணி போற்றும் தஞ்சாவூர் Empty தரணி போற்றும் தஞ்சாவூர்

Post by abirami Mon Apr 06, 2015 6:20 pm



பெரிய கோயில் - 1000 - தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டி முடித்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி விழா நடக்கிறது. இதைமுன்னிட்டு இந்த ஸ்பெஷல் பக்கங்களை தந்துள்ளோம்.

தஞ்சையின் பொருள்
சோழமண்டலம் என்று பெருமை பெற்ற சோழநாடு தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிசெய்யப்பட்ட பகுதியாகும். தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள். "தண்+ செய்' என்று பதம் பிரித்து இதற்கு பொருள் சொல்வர். பெருகி வரும் காவிரியாற்றால் இப்பகுதி வளம் மிக்கதாகத் திகழ்ந்தது. இவ்வூர் பற்றிய மிக பழமையான குறிப்புகள் பல்லவமன்னன் சிம்மவிஷ்ணுவின்(கி.பி.555- 590) கல்வெட்டிலும், திருநாவுக்கரசர் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்திலும் இடம் பெற்றுள்ளன. தஞ்சையில் பெரியகோயில் கட்டப்படுவதற்குமுன் "தஞ்சை தளிக்குளத்தார் கோயில்' என்றொரு சிவாலயம் இங்கு இருந்ததாகத் தெரிகிறது. தற்போதும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பெயராலேயே இவ்வூர் "தஞ்சாவூர்' என அழைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

கலைக்கோயில் கட்டிய சோழன்
உலகிற்கு ஆன்மிகக் கருத்தையும், பண்பாட்டுச் சிந்தனையையும் வாரி வழங்கி வரும் தமிழகத்திலுள்ள தஞ்சை மண்டலத்தை கி.மு.,இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி., 13ம் நூற்றாண்டு வரை 1,500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சோழ அரச மரபினர் ஆட்சி செய்து வந்தனர். அவர்களின் முதல் 400 ஆண்டு கால ஆட்சிச் சிறப்பைச் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது.காவிரியில் கல்லணை கட்டி, காடு திருத்தி, நாட்டை வளம் பெறச் செய்த கரிகாற் பெருவளத்தான் என்ற சங்க காலச் சோழ மன்னன் கி.பி., முதலாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தான். தொடர்ந்து சோழப் பரம்பரையின் புகழ் சிறிது குன்றியிருந்தாலும், ஆட்சி தொடர்ந்து நடந்தது.கி.பி., 850ம் ஆண்டு சாத்தன் பழியிலி என்ற முத்தரையர் குலச் சிற்றரசனிடம் போரிட்டு 90 விழுப்புண்களை பரகேசரி விஜயாலயச் சோழன் பெற்றான். இவன் தான் தஞ்சாவூர் நகரைக் கைப்பற்றி, தனது தலைநகராகக் கொண்டு, தஞ்சைச் சோழப் பரம்பரையைத் தோற்றுவித்தான். பிற்காலச் சோழமன்னர்களின் பரம்பரையில் தோன்றியவரே ராஜராஜசோழன். இவர் சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவன் ராஜகேசரி என்ற பட்டப்பெயருடன் மேலும் 42 சிறப்புப் பெயர்களையும் பெற்றவன்.

ராஜராஜசோழனின் "பெரிய்ய்ய்ய' குடும்பம்
ராஜராஜனுக்கு பல மனைவியர் இருந்தனர். இவர்களில் தந்திசக்திவிடங்கி என்னும் லோகமாதேவியே பட்டத்தரசியாக இருந்தார். இவரைத் தவிர, சோழமாதேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன்மாதேவி, அபிமானவல்லி, லாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வில்லவன்மாதேவி, வானவன்மாதேவி என்ற பத்துதேவியர்கள் மனைவியராக இருந்தனர். வானவன் மாதேவிக்குப் பிறந்த ஒரே பிள்ளையே புகழ்மிக்க ராஜேந்திரச்சோழன். இவனுக்கு ராஜராஜனால் இட்ட பெயர் மதுராந்தகன். இது ராஜராஜனின் சித்தப்பா நினைவாக வைக்கப்பட்டதாகும். மதுராந்தகனுக்கு இரு சகோதரிகள். மூத்தவள் மாதேவ அடிகள். இளையவள் குந்தவை. ராஜராஜன் தன்னை வளர்த்த பாட்டி செம்பியன் மாதேவியின் நினைவாக ஒரு மகளுக்கு மாதேவஅடிகள் என்றும், சகோதரி குந்தவையின் நினைவாக ஒரு மகளுக்கு குந்தவை என்றும் பெயரிட்டார். இதன் மூலம் அவருடைய பாசபந்தத்தையும், நன்றியுணர்வையும் அறிய முடிகிறது.

1006ல் தொடங்கிய திருப்பணி
ஆயிரம் ஆண்டுக்கு முன் தமிழர்கள் மிக உயர்ந்த பண்பாட்டுடன் கூடிய சமுதாய மரபுகளைப் பேணிகாத்தனர் என்பதை எதிர்காலச் சந்ததியினருக்குத் தெரிவிக்கவே மாமன்னன் ராஜராஜன் தஞ்சையில் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் எனும் பெரிய கோயிலைக் கட்டி, அதற்குள் தமது நெஞ்சில் குடியிருந்த பிரகதீஸ்வரர் என்னும் பெருவுடையாரை நிறுவினான். கி.பி., 1006ல் திருப்பணியைத் தொடங்கி, 1010 ல் கட்டி முடித்தான். இக்கோயிலின் மூலம் சோழர்கால தமிழகத்தின் வரலாறு, கல்வெட்டியல், அரசியல், கட்டடம், சிற்பம், ஓவியம், நடனம், இசை ஆகிய பல்கலைகளுடன் சமுதாயப் பண்பியல் மற்றும் இறைக் கொள்கை ஆகியவற்றை நமக்கு இதன் மூலம் மாமன்னர் எடுத்து கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகளாக இந்தக்கோயில் தமிழகத்தின் பெருமையை உலகுக்கு அறிவித்துக் கொண்டுள்ளது.

கோயிலைக் கட்டும் எண்ணம் வந்த விதம்
காஞ்சிபுரத்தில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனின் மனதை மிகவும் கவர்ந்தது. அக்கோயிலை ""கச்சிப்பேட்டுப் பெரியதளி'' என்று போற்றி மகிழ்ந்தார். இக்கோயிலின் அமைப்பு அவருக்குள் உணர்ச்சிப் பெருக்கையும், பக்தியையும் ஏற்படுத்தியது. தானும் ஒரு சிவாலயத்தை அமைக்கவேண்டும் என்ற எண்ணத் தில், தஞ்சாவூரில் பெரியகோயில் திருப்பணியைத் தொடங்கினார். காஞ்சி கயிலாயநாதர் கோயிலைப் பார்த்ததன் விளைவே, தஞ்சைப் பெரிய கோயில் கட்டப் பட அடித்தளமாக அமைந்தது.

பொறுமை மிக்க மாமன்னன்
ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழி என்பதாகும். இளம் வயதில் பெற்றோரை இழந்ததால் பாட்டி செம்பியன் மாதேவியார், சகோதரி குந்தவை ஆகியோரின் கண்காணிப் பில் வளர்க்கப் பட்டார். அவருடைய மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலன் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார். நாட்டுமக்கள் அனைவரும் இளையவன் அருள் மொழியே நாட்டை ஆளவேண்டும் என்று விரும்பினர். ஆனால், ராஜராஜனின் சித்தப்பா மதுராந்தக உத்தம சோழனுக்கு, தானே சோழநாட்டின் மன்னராகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ராஜராஜனும் அரியணையை விட்டுக்கொடுத்து அவரை மன்னனாக்கினார். மதுராந்தகச் சோழன் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவருடைய மறைவுக்குப்பின், தஞ்சைச் சோழர் வரலாற்றில் பொற்காலத்தைப் பதித்தான் ராஜராஜசோழன். கி.பி.,985ம் ஆண்டு தஞ்சைச் சோழ அரசுக் கட்டிலில் அமர்ந்த இவனுக்கு, பட்டம் சூட்டும் வரை அருள்மொழி என்ற பெயரே இருந்தது.

பாரம்பரியச் சின்னமானது எப்படி?
கி.பி. 1987ல் யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தஞ்சைப் பெரியகோயிலை அறிவித்தது. இதன் மூலம் இக்கோயிலின் பெருமை உலகத்தின் பலநாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. மனிதமரபினை, பண்பாட்டினைப் பறைசாற்றும் கலைப்பொக்கிஷமாகத் திகழும் இக்கோயிலைக் காண நாள்தோறும் வெளிநாட்டவர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இக்கோயிலை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்ததற்கான காரணங்கள்.
1.பொதுவாக பெரிய கோயில்களை பலகாலம் பல மன்னர்கள் கட்டுவர். ராஜராஜன்
ஒருவனாலேயே எழுப்பப்பட்ட முழுமையான பிரம்மாண்ட கோயில் இது.
2. ஒரே தன்மையான செந்நிறக்கற்களால் அமைந்த திருக்கற்றளி கோயிலாக அமைந்தது. (கற்களால் ஆன கோயில்களைக் கற்றளி என்பர்)
3. கருவறைக்கு மேலே உயரமான விமானம் அமைத்தது மாறுபட்ட அமைப்பாக இருந்தது.
4. புவியீர்ப்பு மையத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.
5. ராஜராஜசோழன், தானே கோயில் கட்டியதற்கான ஆதாரத்தை கல்வெட்டில் பொறித்ததோடு மட்டுமல்லாமல், எந்தெந்த வகையில் பொருள் வந்தது என்பதையும், கோயிலுக்கு யார் யாருடைய பங்களிப்பு, கும்பாபிஷேகம் நடத்திய வரலாறு ஆகியவற்றை கல்வெட்டில் பொறித்துள்ள தகவல்கள்.
6. கற்றளியால் அமைந்த விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டது.
7. தஞ்சைப் பெரிய கோயில் ஒரு வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல. இது தமிழக வரலாறு, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பெட்டகமாகத் திகழ்கிறது.

கேரளாந்தகன் வாயில் கோபுரம்
பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் வாயில் கோபுரம். ராஜராஜன் கி.பி.,988 ம் ஆண்டு சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனைப் போரில் வெற்றி பெற்றதைப் போற்றும் வகையில் இக்கோபுரத்திற்குக் ""கேரளாந்தகன் வாயில் கோபுரம்'' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இக்கோபுரம் 90 அடி உயரமும் 54 அடி அகலத்தில் ஐந்து நிலையுடன் அமைந்துள்ளது. கோபுரத்தின் நிலைக்கால்கள் ஒவ்வொன்றும் நான்கு அடி நீளம், மூன்று அடி அகலம், 40 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆனவை. கோபுரத்தின் நாற்புறங்களிலும் நாயக்கர் மற்றும் மராட்டியர் காலச் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிச் செல்லும், சிவகங்கைக் கோட்டை உள்மதில், செவ்வப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

மராட்டியர் நுழைவுவாயில்
தஞ்சை பெரியகோயிலில் சிவகங்கைக் கோட்டை எனப்படும் இக்கோட்டை செவ்வப்ப நாயக்கர் காலத்தில் ஒரு சதுர கி.மீ., பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அகழியை ஒட்டி தாழ்வாக ஒன்றும், இடைவெளிவிட்டு உட்புறமாகச் சற்று உயரமாக ஒன்றும் செம்பாறாங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. கோயிலின் கிழக்கில் செங்கல், சுண்ணாம்புச் சாந்து கொண்டு 1803 இல் மராட்டியர் நுழைவுவாயிலை தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி அமைத்துள்ளார். வாயிலின் இருபுறமும் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன.

கோயிலைக் கட்டிய தச்சர்கள்
கல்வெட்டில் தஞ்சைப் பெரியகோயில் ""ராஜராஜீச்சரம்'' என்று குறிக்கப்படுகிறது. இலக்கணப் படி ராஜராஜேச்சரம் என்பதுசரியானதாக இருந்தாலும், கல்வெட்டுகளில் ராஜராஜீச்சரம் என்ற பெயரே இடம் பெற்றுள் ளது. இக்கோயிலை உருவாக்கியவர், வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன். இவருடைய பணிக்கு உதவியாக மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்பவர்களும் குஞ்சரமல்லனுக்கு துணையாக கோயில்திருப்பணிகளைச் செய்தனர்.

ராட்சத மதில்சுவர்
கோயிலை சுற்றி சுமார் 28 அடி உயரத்தில் அமைந்துள்ள மதில் ராஜராஜனின் தலைமை அமைச்சரான சோழ மண்டலத்து உய்யக் கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு அமன் குடியான கேரளாந்தகச் சதுர்வேதி மங்கலத்து கிருஷ்ணன் ராமன் என்னும் மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால் மன்னனின் ஆணைப்படி கட்டப்பட்டது. மதிற்சுவர் மீது வரிசையாக நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மதிற்சுவரின் வெளிப்புறத்தின் கீழ்பகுதியில் சோழர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்காக 800 அடி நீளமும், தெற்கு வடக்காக 400 அடி அகலமும் கொண்டுள்ளன. கோயிலின் பிரகாரச் சுற்றில் கருங்கற்களினாலும், செங்கற்களினாலும் தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி கி.பி., 1803ல், தளம் அமைத்தார்.

உலகின் முதல் பொற்கோபுரம்
தட்சிணமேரு என்னும் தஞ்சை பெரிய கோயில் விமானம் முழுவதும் செப்புத்தகடுகளைப் போர்த்தி அதன்மேல் பொன் வேய்ந்தான் ராஜராஜன் என்று கல்வெட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன. 216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததைஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியில் குறிப்பிட்டுள்ளார். தட்சிணமேருவான தஞ்சை ராஜராஜேஸ்வரத்தை எப்படி ராஜராஜன் பொன்மயமாக அமைத்தானோ, அதுபோல, தில்லை நடராஜர் கோயில் விமானத்தை குலோத்துங்கன் அமைத்தான் என்ற செய்தி சிதம்பரம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. பிற்காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகளில் இந்த விமானத்தில் வேய்ந்த பொன் முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது.

கோபுரமுருகன் மீது திருப்புகழ்
தஞ்சைப்பெரிய கோயிலில், ராஜராஜ சோழன் முருகப்பெருமானுக்கு தனிசன்னதி கட்டவில்லை. அவர் எழுந்தருளி இருக்கும் திருக்கோயில்களுக்குச் சென்று திருப்புகழ் பாடும் அருணகிரிநாதர் ராஜராஜன் கட்டிய பெரியகோயிலைக் காணும் ஆவலில் வந்திருக்கிறார். தனிசன்னதி இல்லாததால் கோபுரத்தில் இருக்கும் முருகனையே ""தஞ்சை மாநகர் ராஜகோபுரத்து அமர்ந்த பெருமாளே'' என்று பாடியுள்ளார். பிற்காலத்தில் முருகப்பெருமானுக்கு பெரியஅளவில் நாயக்க மன்னர்கள் சன்னதி அமைத்துள்ளனர்.

கொடிமரம்
நந்திமண்டபம் அருகில் மேற்குப் புறத்தில் செப்புத்தகட்டால் மூடப்பட்ட கொடிமரம் உள்ளது. இம்மண்டபம் சிறந்த கலை வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது. இது நாயக்கர் காலத்தில் அமைக்கப் பட்டதாகும். இரண்டாம் சரபோஜி மன்னர் இந்த கொடிமரத்தூணுக்கு கொறடு (ஒட்டுத்திண்ணை என்னும் பிடிமானம்) ஒன்றைப் புதிதாக அமைத்துள்ளார். அத்துடன் நந்தி மண்டபத்தின் கிழக்கே ஒரு செங்கல் மேடை அமைத்து, அதில் சித்திரைத் திருவிழாவின் 9ம் நாள், "சரபேந்திர பூபால குறவஞ்சி' என்னும் நாடகம் நடக்கச் செய்துள்ளார். அதன் எதிரில் வட்டமான மேடை அமைத்து, அதில் அமர்ந்து கலை நிழ்ச்சிகளைக் கண்டுகளித்துள்ளார்.

பிரம்மாண்ட நந்தி
தஞ்சாவூர் கோயில் என்றாலே அங்குள்ள விமானமும், நந்தியும் தான் எல்லார் நினைவிலும் வரும். ஒரே கல்லினால் செய்யப்பட்ட மிகப் பெரிய நந்திகளுள் இதுவும் ஒன்றாகும். (திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள கல்நந்தி தஞ்சாவூர் நந்தியை விடப் பெரியது. தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியும் இதுதான்) திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த நந்தி 25 டன் எடை உடையது. 19 அரை அடி நீளம், எட்டேமுக்கால் அடி அகலம், 12 அடி உயரம் கொண்டது. விஜயநகரக் கலைபாணியில் அழகும், கம்பீரமும் கொண்டு அமைந்துள்ள இந்த நந்தி தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டதாகும். நந்தி, நந்தி மண்டபம் ஆகியவற்றை கி.பி., 17ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் ஆகியோர் உருவாக்கினர். இவர்களது சிலைகள் இந்த மண்டபத் தூண்களில் உள்ளன. நந்தி மண்டபத்தின் மேல் விதானத்தில், மூன்றாம் சிவாஜி மன்னர் காலத்தில் பூக்களும், பறவைகளும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.

இன்னொரு நந்தி இருப்பது தெரியுமா?
நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசைநோக்கியபடி உள்ள நந்தியே ராஜராஜன் காலத்தைச் சேர்ந்ததாகும். இதுவே முதலில் பெருவுடையாருக்கு எதிரில் இருந்தது. பின்னாளில் நாயக்கர்கள் மூலவருக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி, கேரளாந்தகன் மற்றும் ராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்தது. பிற்காலத்தில் திருச்சுற்று மாளிகைக்கு மாற்றப்பட்டது.

உலகின் பெரிய லிங்கம்
கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியதாகும். ஆறு அடி உயரமும் 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும் 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனிக் கருங்கற்களினால் செதுக்கப் பட்டு இணைக்கப் பட்டுள்ளது. நாம் தரிசனத்துக்கு செல்லும் போது, நம் பார்வையில் படுவது லிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக, ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தஞ்சைக் கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் செய்யப்படுகிறது. இக்கோயிலில் தினமும் காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன.சிவலிங்கத்தைச் சுற்றி வர கருவறையைச் சுற்றி இடமும் உள்ளது. அதில் சோழர்கால ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. தஞ்சாவூர் பெரிய கோயில் மூலவரை பிரகதீஸ்வரர் என்றும், அம்பாளை பெரியநாயகி என்றும் அழைப்பர். இங்குள்ள வாராகியை வழிபட்டால் எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.
abirami
abirami

Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum