Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


எமது மக்களின் சகஜ வாழ்வை பாதிக்கும் காரணிகள் ஐ.நா அறிக்கையில் ஆராயப்படவில்லை: விக்னேஸ்வரன்

Go down

எமது மக்களின் சகஜ வாழ்வை பாதிக்கும் காரணிகள் ஐ.நா அறிக்கையில் ஆராயப்படவில்லை: விக்னேஸ்வரன்

Post by oviya on Mon Oct 05, 2015 1:37 pm

எமது மக்களின் சகஜ வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் காரணிகள் பல திடமாக ஐக்கிய நாடுகள் ஆய்வறிக்கையில் ஆராயப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற எண்ணக் கருவின் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இரணைமடுவிலிருந்து தொடக்கப்படுகின்றது. இதில் வரவேற்புரை நிகல்ழ்த்தும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில்,

மைத்திரி ஆட்சியில் நல்லிணக்கம் கொண்ட நிலையான நாட்டை உருவாக்க உத்தேசித்திருக்கும் எமது ஜனாதிபதியும் அவரின் அமைச்சர்களும், அலுவலர்களும், ஆதரவாளர்களும் எம்மால் வரவேற்கப்பட வேண்டியவர்கள். அத்துடன் எமது சுக துக்கங்களில் பங்கெடுக்கும் இராஜதந்திரிகளும் எம்மால் மனமுவந்து வரவேற்கப்பட வேண்டியவர்கள்.

இன்று “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற எண்ணக் கருவின் நடைமுறைப்படுத்தல் நிகழ்வாகவே இந்த உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் இரணைமடுவிலிருந்து தொடக்கப்படுகின்றது.

அதனை நாம் வரவேற்கின்றோம். உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கவும், சுயநிறைவை ஏற்படுத்தவும், சேதன உரத்தை வெகுவாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் இன்னோரன்ன காரணங்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியை வரவேற்கின்றோம்.

பல வருட காலமாக பலரால் மறக்கப்பட்டிருந்த அல்லது மறைக்கப்பட்டிருந்த எம் மக்கள் மத்தியில் இருந்து தேசிய ரீதியான ஒரு நிகழ்வை இன்று முடுக்கி விடுவது வருங்காலத்தில் பலமான தேசிய ஒருமைப்பாட்டையும் நிலையான நிலைமைப் பாட்டையும் உண்டு பண்ண உதவும் என்று எதிர்பார்க்கின்றோம்.

பெரும்பான்மையின மக்கள் மரமாகவும் சிறுபான்மையின மக்கள் கொடியாகவும் இணைந்து வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு என்ற எண்ணம் இந்நாட்டில் பலர் மத்தியிலும் இருந்து வந்திருக்கின்றது. வடகிழக்கு மாகாண மக்கள் அதை ஏற்க வில்லை. ஏற்கவும் முடியாது. காரணம் சரித்திர ரீதியாக பன்னெடுங்காலமாகத் தமிழ்ப் பேசும் வடகிழக்கு மாகாண மக்கள் இந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள், வருகின்றார்கள்.

சென்ற நூற்றாண்டின் முதற் பகுதியில் சிங்களத் தலைவர்களாகிய சேர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களும் திரு.ஈ.ஜே.சமரவிக்ரம அவர்களும் இதை வலிந்து குறிப்பிட்டிருந்தார்கள். வடக்கு கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் எப்பொழுதுமே பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்துள்ளார்கள் என்று கூறியிருந்தனர். இரு மரங்கள் ஒருமித்து பக்கம் பக்கமாக வாழ்தலையே எம்மக்கள் விரும்புகின்றனர். பிறிதொன்றுக்குக் கொடியாக வளைந்திருக்க விரும்பவில்லை.

இன்று தொடங்கப்படும் “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற எண்ணக்கரு தேவைகளில் இருந்து விடுபட நாம் எடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு அங்கம். உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய நாம் எடுக்கும் நடவடிக்கை தேவைகளில் இருந்து நம்மை விடுவிக்கும். அதேநேரம் நாம் பயத்தில் இருந்தும் விடுபட வேண்டும். மதிப்புடனும் வாழ வேண்டும். மற்றைய மாகாணங்களில் இதனை உறுதிப் படுத்தியிருக்கும் நாங்கள் வடகிழக்கு மாகாணங்களில் அதை உறுதிப்படுத்த முனையவில்லை என்பதே வருத்தத்திற்குரியதொன்று.

ஆகவே உணவுப் பாதுகாப்பு கொடுக்கும் போது மக்கள் பாதுகாப்பும் அவர்களுக்குத் தேவை. இல்லையென்றால் வலிந்து வைத்து வாழ்வாதாரங்கள் வழங்குவது போல் ஆகிவிடும். பயத்தை ஏற்படுத்தி, வலிந்து தம்வசம் வைத்து, வாழ்வாதாரங்கள் கொடுத்து எம்மக்களை அடிமைகள் போல் நடத்தும் சந்தர்ப்பங்கள் அண்மைக் காலங்களில் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இது வரை காலமும் எம்மக்களிடையே அவர்களின் தேவைகள் பற்றிய ஒரு முழுமையான சகல துறைகள் சம்பந்தமான மதிப்பீடு, சகல மட்டத்திலும், முக்கியமான சர்வதேச உதவி நிறுவனங்களின் உதவியுடன் செய்யப்படவில்லை.

2003ம் ஆண்டில் இது நடைபெற்றது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் நிறுவனம் இதைச் செய்தது. ஆனால் அதன்பின் நடைபெறவில்லை. இது நடைபெற வேண்டும். நாம் அண்மையில் ஐக்கிய நாடுகளிடம் கேட்டதோ சகல துறை சகல மட்டத் தேவை பற்றிய ஆய்வறிக்கை. எமக்குக் கிடைத்ததோ மனித நல ஆய்வறிக்கை மட்டுமே. அதுவும் எம்மக்களின் சகஜ வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் காரணிகள் பல திடமாக அதில் ஆராயப்படவில்லை.

எமது காணிகள் மற்றோரின் வசம். உரியவர்கள் உட்செல்ல முடியாத நிலை; வாழ்வாதாரங்கள் வழங்காத நிலை. போருக்குப் பின்னரான விரக்தி நிலை என்பன அதில் ஆராயப்படவில்லை. சமூகத்தில் போரின் தாக்கங்களை புரிந்து கொள்ள நாம் எத்தனிக்கவில்லை. வறுமை நிலை போக்க வழி வகைகள் ஆராயப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து மக்கள் தேவைகளை ஆராய முற்படவில்லை. இது யுத்தம் முடிவடைந்த உடனேயே நடைபெற்றிருக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக மேலிருந்து தமக்கு உகந்ததைத் தரவே மத்திய அரசாங்கம் விரும்புகின்றது. கீழ் மட்டத்தில் மக்களிடம் இருந்து எங்கள் தேவைகளை அறிந்துணர்ந்து செயல்ப்பட விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்தே மக்கள் சேவையில் ஈடுபட மத்தியானது விரும்புகின்றது.

2003ம் ஆண்டில் நடைபெற்றது போல முழுமையான தேவைகள் சம்பந்தமான ஆய்வறிக்கைகளைப் பெற்று மாகாண அபிவிருத்திக்கான மேன்மைத் திட்டம் ஒன்றை உருவாக்கி மக்களின் கருத்துக்களைச் செவிமடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த விழைந்தால் நாம் அதற்கு ஒரு போதும் தடையாக இருக்க மாட்டோம். மாறாக எமது தற்போதைய நிலையை அறிய விரும்பாமல் எமது பாதிப்புக்களை பல மட்டங்களிலும் ஆய்வு செய்ய எத்தனிக்காமல், முழுமையான முன்னெடுப்புகளை முடுக்கிவிட மனம் இல்லாமல், மனித தேவைகளின் ஒரு அங்கத்தை மட்டும் வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெறுவது எமக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது.

ஆனால் இதனைச் செய்ய முனைபவர் எமது மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது எமக்கு மன மகிழ்வைத் தருகின்றது. மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் விவசாயக் குடும்பத்தில்ப் பிறந்தவர். எம் விவசாயிகளுக்கு அது ஒரு மகிழ்வூட்டுஞ் செய்தி. எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போராடி ஜனநாயகத்திற்கு வழிவகுத்தவர். அந்த விதத்தில் எமது தமிழ்ப் பேசும் மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர். என தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum