Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அமெரிக்க பிரேரணையும் விசாரணை பொறிமுறையும்

Go down

அமெரிக்க பிரேரணையும் விசாரணை பொறிமுறையும்

Post by oviya on Sat Oct 03, 2015 1:26 pm

உலக நாடுகள் மற்றும் இலங்கை மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதாவது இலங்கை தொடர்பான இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இந்தப் பிரேரணை தொடர்பில் தீவிரமான பிரசாரங்கள் பல்வேறு தரப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் கலப்பு நீதிமன்ற செயற்பாட்டு கோரிக்கை இல்லாமல் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தவகையில் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகளைக் கொண்டு இலங்கை விசாரணையை நடத்தவேண்டும் என்று அமெரிக்காவின் இந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் வழக்கறிஞர்கள் விசாரணையாளர்களுடன் இலங்கையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இந்த கலப்பு நீதிமன்ற செயற்பாடு இல்லாமல் பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளுடன் விசாரணை நடத்த அமெரிக்க பிரேரணை வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம், இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதை மதிப்பீடு செய்வது அவசியம் என்றும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்க பிரேரணை வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துதல் போன்றன தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 32வது கூட்டத்தொடரின் போது வாய்மொழி மூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து 34வது கூட்டத்தொடரில் முழு அளவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுவது அவசியமாகும் எனவும் பிரேரணை குறிப்பிடுகின்றது.

அது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசேட அறிக்கையாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கவேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் அதிகாரப் பகிர்வு திட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனவும் அரசியலமைப்பின் 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம் என்றும் பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிறுபான்மை மத, இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சமய தலங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சங்கள் இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டவுடன் ஜெனிவா வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவின் அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை வழிமொழிந்துள்ள நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

அத்துடன் பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை முன்னெடுத்து கடினமான பாதையில் அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க தயாராகவுள்ளதாகவும் நீண்டகாலமாக காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டுவதற்கான தக்க தருணமொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இதுவொரு வரலாற்றுத் திருப்புமுனையாகும். அரசாங்கம் வாக்குறுதிகளை நம்பகத்தன்மையுடன் நிறைவேற்றவேண்டும். பிரேரணையில் பல்வேறு முன்னேற்றகரமான விடயங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் உள்ளடக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆகவே பாதிக்கப்பட்ட தரப்பிற்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான நம்பகரமான தன்மை இதில் காணப்படுகின்றது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற விடயம் அமெரிக்க பிரேரணையில் வலியுறுத்தப்படவேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும் தமிழ்த் தலைவர்களும் ஜெனிவாவில் வலியுறுத்தி வந்தனர்.

மறுபுறம் இலங்கையானது அமெரிக்க பிரேரணைக்கு அனுசரணை வழங்கியதுடன் பரிந்துரைகளை அமுல்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்தது.

இவ்வாறான பின்னணியில் பல்வேறு அழுத்தங்கள், சவால்களுக்கு மத்தியில் அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் தற்போது அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதனை உரிய முறையில் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான அழுத்தங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கவேண்டும் என்பதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இந்த நிலைமையை கண்காணிக்கவேண்டும்.

எவ்வாறான விசாரணை பொறிமுறை எந்தவகையில் முன்னெடுக்கப்பட்டாலும் யுத்தத்தினாலும் மனித உரிமை மீறலினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அதனை இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காவிடின் எவ்வாறான பொறிமுறை முன்னெடுக்கப்பட்டாலும் அர்த்தமுடையதாக அமையாது.

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை மனித உரிமை மீறல்கள் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்த விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை.

முன்னைய அரசாங்கம் கடந்த 2009ம் ஆண்டு பிரேரணை ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றிக்கொண்டது. இந்தப் பிரேரணையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக ரீதியில் ஆராயப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் கடந்த ஆறு வருடங்களாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலைமை சர்வதேசத்தின் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் இலங்கை தொடர்பில் கடந்த 2012, 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அமெரிக்காவினால் மூன்று பிரேரணைகள் மனித உரிமை பேரவைக்கு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக 2014ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிரேரணையின் பிரகாரமே இலங்கை தொடர்பான விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் முன்னெடுத்தது.

அந்த விசாரணை அறிக்கையே கலப்பு நீதிமன்றத்தை வலியுறுத்தி பரிந்துரை செய்திருந்தது. எனினும் தற்போது அமெரிக்க பிரேரணையின் பிரகாரம் விசாரணை நடத்த ஆணை கிடைத்துள்ளது.

இந்நிலையில் அநீதிக்கு உட்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் பொறிமுறையை அமைத்து சர்வதேச தரத்துக்கு ஏற்ப விசாரணை செயற்பாட்டை முன்னெடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

எனவே மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நீதி செயற்பாட்டை முன்னெடுப்பதே பொருத்தமாக இருக்கும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum