Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


மைத்திரி கோஷ்டியின் உளறல்

Go down

மைத்திரி கோஷ்டியின் உளறல் Empty மைத்திரி கோஷ்டியின் உளறல்

Post by oviya on Thu Sep 24, 2015 1:29 pm

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை தொடர்பான இலங்கை ஜனாதிபதியின் உளறல், சிங்களத் தலைவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
என்னதான் இருந்தாலும், மைத்திரிபாலா ஒரு அரசின் தலைவர். 'யாரால கெட்டான் தன் வாயால கெட்டான்' என்கிறவிதத்தில் ஓர் அரசுத் தலைவரே பேசலாமா - என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

அப்படி என்னதான் சொன்னார் மைத்திரி?

"ராஜபக்ச மட்டும் பதவியில் இருந்திருந்தால் (ஐ.நா. அறிக்கையில்) குற்றமிழைத்தவர்களின் பெயர்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கும்" - இதுதான் மைத்திரி பீத்தலாகச் சொன்ன தகவல். (அவர் பயன்படுத்திய வார்த்தைகளைக் கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன்.)

கொழும்பில் பத்திரிகைகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த சிறப்புப் பேட்டியின் போதுதான் மைத்திரி இப்படி உளறியிருக்கிறார்.

"ஐ.நா. அறிக்கையில் காரம் குறைக்கப்பட்டதற்கு எங்கள் அரசின் நடவடிக்கைகள்தான் காரணம்...... ஜனவரி 8க்கு முன் தயாரிக்கப்பட்டிருந்த அறிக்கையிலிருந்த காரத்தைக் குறைத்தே ஆக வேண்டிய நெருக்கடி எங்கள் ஆட்சியால்தான் ஏற்பட்டது......

தங்களது பெயர்கள் அறிக்கையில் குறிப்பிடப்படலாம் - என்று படைத்தளபதிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மூத்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சிலர் அச்சத்தில் இருந்தனர்.... அவர்களில் எவரது பெயரும் அறிக்கையில் இடம் பெறாததற்கு நாங்கள்தான் காரணம்......

ஜனவரி 8க்கு முன் இருந்த விதத்திலேயே விசாரணை அறிக்கை வெளியாகியிருந்தால், நாடும் மக்களும் சில முக்கியஸ்தர்களும் கடும் விளைவுகளை எதிர்கொண்டிருப்பர்...."

இப்படியெல்லாம், அந்த அதிகாரபூர்வ உயர்நிலை செய்தியாளர்கள் சந்திப்பில், சிதறு தேங்காய் விட்டிருக்கிறார் மைத்திரி. (முக்கியஸ்தர்கள் என்று மைத்திரி யாரைக் குறிப்பிடுகிறார் - என்பது விளங்குகிறதா உங்களுக்கு!)

அதே செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிக்கு எந்த விதத்திலும் தான் இளைத்தவரல்ல என்பதைப் போல், தன் பங்குக்கு தானும் உளறியிருக்கிறார். "அறிக்கையில் எவர் பெயரும் இடம்பெறவில்லை...... இதன்மூலம் இராணுவத்தினரை நாம் காப்பாற்றியுள்ளோம்" என்பது ரணிலின் பீத்தல்.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, உளறுவாயர்கள் பட்டியலில் தானும் எப்படியாவது இடம்பிடித்துவிட வேண்டும் என்கிற வெறியோடு முண்டியடித்துக்கொண்டு முன்னே பாய்ந்திருக்கிறார்.

'ஜனவரி எட்டுக்கு முன் மட்டுமல்ல, மார்ச்சில் இந்த அறிக்கை வெளியாகியிருந்தாலும் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்' என்பது சமரவீரவின் கண்டுபிடிப்பு. இவர்தான், ஜெனிவாவில் நடக்கும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக் குழுவுக்குத் தலைமை தாங்குகிறார்,

இலங்கை அரசின் கருத்துக்களை அந்தப் பேரவையில் தெரிவிக்கிறார். 'நாங்கள் பரிபூரண சைவம்' என்கிற நாடகத்தை ஜெனிவாவில் அரங்கேற்றியபடியே, மைத்திரி - ரணிலின் சாமியாட்டத்துக்கு அவர் உடுக்கடித்திருப்பது கொடுமை.

ஐ.நா.விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது - என்றும், 'இந்த அறிக்கை ஜெனிவாவில் ஒரு ஏ.சி. அறைக்குள் அமர்ந்து கொண்டு தயாரிக்கப் பட்டிருக்கிறது' என்றும் கோதபாய ராஜபக்ச சொல்வதைக் கேட்டு யாரும் அதிர்ந்து விடப் போவதில்லை.

ஆனால், மைத்திரி, ரணில், சமரவீரவின் ஒப்புதல் வாக்குமூலம் நிச்சயமாக அதிர்ச்சியை அளித்திருக்கும்.

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், 'மின்சாரக் கதிரையிலிருந்து மகிந்த ராஜபக்சவை நாங்கள்தான் காப்பாற்றியிருக்கிறோம்' என்று மைத்திரியும் ரணிலும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தனர்.

அது தேர்தல் அரசியல் என்றே எடுத்துக்கொள்ளப்பட்டது. இப்போது, 'நாங்கள் தான் கடும் நெருக்கடி கொடுத்து விசாரணை அறிக்கையை நீர்த்துப் போக வைத்தோம்' என்று இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் பகிரங்கமாகப் பேசுவதைப் பார்க்கும்போது, ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்தே கேள்வி எழுகிறது.

மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், 48 குற்றவாளிகளின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன் வதந்தி கிளம்பியது.

ஆனால், அறிக்கையில், எவரது பெயரும் இடம்பெறவில்லை. அதுகுறித்த கேள்வியே எழாத அளவுக்கு, மனித உரிமைகள் ஆணையர் செயித் அல் ராத் ஹுசெய்ன் விளக்கம் கொடுத்திருந்தார்.

"போர்க்குற்றங்களுக்கும் மனிதத் தன்மைக்கு எதிரான குற்றங்களுக்கும் வழிவகுக்கிற அடிப்படைக் காரணங்கள் எவை என்று விரிவாக நோக்க வேண்டியிருப்பதால், பெயர்கள் எதையும் நாங்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லை" என்று ஹுசெய்ன் கூறியிருந்தார்.

அவரது அந்தக் கருத்துக்கும், 'நாங்கள் கொடுத்த அழுத்தத்தால்தான் பெயர்கள் வெளியிடப்படவில்லை' என்கிற மைத்திரியின் தம்பட்டத்துக்கும் சம்பந்தமேயில்லை.

ஐ.நா. அறிக்கையில், குற்றமிழைத்தவர்களின் பெயர்கள் மூடி மறைக்கப்பட்டதற்கு இலங்கை அரசுதான் காரணம் - என்று நாம் குற்றஞ்சாட்டுவதற்கும்,

சம்மனே இல்லாமல் ஆஜராகி, 'நாங்கள்தான் அதற்குக் காரணம்' - என்று மைத்திரியே ஒப்புதல் வாக்குமூலம் தருவதற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை எவராலும் புரிந்துகொள்ள முடியும்.

குற்றவாளிகளின் பெயர்கள் வெளியாகாமல் தடுத்ததன் மூலம் நாட்டைக் காப்பாற்றியிருப்பதாக மைத்திரியும் ரணிலும் சொல்வதிலிருந்து, 'இனப்படுகொலை குற்றவாளிகளைக் காப்பாற்றுவதன் மூலமே இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்ற முடியும்' என்கிற ராஜபக்சவின் குரூரமான மனோநிலைதான் இவர்களுக்கும் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

எந்தக் குற்றமாயிருந்தாலும், செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறவன்தான் திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுப்பதும், மூடி மறைக்க முயல்வதும்,

குற்றவாளியைக் காப்பாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை அல்ல...... மேலதிகக் குற்றங்களில் குற்றவாளி ஈடுபட அவை வழிவகுக்கின்றன.....மேலும் பலர் அதே குற்றத்தைச் செய்யவும் காரணமாகி விடுகின்றன. அறுபது ஆண்டுகளாக தமிழின அழிப்பு தொடர்வதற்கு இதுதான் அடிப்படை.

கொழும்பிலிருந்து வரும் ஆங்கில இதழ் ஒன்றில், சென்ற வாரம் வாசகர்களுக்கு இடையில் நடந்த விவாதம் இப்போது நினைவுக்கு வருகிறது.

"நீங்கள் கேட்பது மாதிரியே சர்வதேச விசாரணையை அனுமதித்து விடுகிறோம்.... அந்த விசாரணையில் ராஜபக்சவும் மற்றவர்களும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்குத் தண்டனையும் கொடுக்கப்பட்டு விடுகிறது... அதனால் உங்களுக்கு (தமிழர்களுக்கு) என்ன நன்மை" என்பது சிங்கள வாசகர் ஒருவரின் கேள்வி. (நியாயமாத்தான் தெரியுதுல்ல!)

இந்தக் கேள்விக்கு, தமிழ் வாசகர்கள் தரப்பிலிருந்து, பூசி மெழுகுகிற வேலையெல்லாம் இல்லாமல், தெளிவான பதில்கள் பதிவாகியிருக்கின்றன.

"திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டவர்களைத் தேடிப்பிடித்து கூண்டில் ஏற்றும்போது, திருடுபோன பொருளையும் மீட்க வாய்ப்பிருக்கிறது.... கொலைக்குற்றத்தைப் பொறுத்தவரை, குற்றவாளியைக் கூண்டில் ஏற்றினாலும், போன உயிரை மீட்டுவிட முடியாது..... அந்த அடிப்படையில்தான், 'என்ன நன்மை' என்று கேட்டிருக்கிறீர்கள்.....

சுமார் அறுபது ஆண்டுகளாக இலங்கையில் தமிழின அழிப்பு தொடர்கிறதென்றால், அதற்குக் காரணம் - குற்றவாளிகள் ஒருபோதும் தண்டிக்கப்படாததுதான்! இந்த உண்மையை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்.

இன அடிப்படையில் தமிழர்களைக் கொன்று குவிப்பவர்கள், ராஜபக்சவாகவே இருந்தாலும் கூட தண்டிக்கப்படுவார்கள் என்பது ஒரே ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டால், அன்றுடன் இந்த மண்ணில் நிகழ்கிற இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும். அது தமிழர்களாகிய எங்களுக்கு நன்மையா இல்லையா?"

தமிழ் வாசகர்கள் கேட்டிருக்கும் இந்தக் கேள்விக்கு சிங்கள வாசகர்களால் பதிலளிக்க முடியவில்லை, இன்று வரை!

தாயக மண்ணிலிருந்து ஜெனிவாவுக்குப் போயிருக்கிற சட்டத் தரணிகள், சங்கறுப்பதைப்போல நமது கழுத்தை அறுப்பவர்களின் அக்கப்போர்களைப் படித்துக் கொண்டிராமல்,

புத்திசாலித் தனமான வாதங்களை முன்வைக்கிற தமிழர்களின் கருத்துக்களைத் தவறாமல் படிப்பது நல்லது. இதையெல்லாம் படிக்க ஆரம்பித்தால், 'இனப் படுகொலை என்றெல்லாம் சொல்லக் கூடாது' என்று பேசுகிற அபத்தத்திலிருந்தாவது அவர்கள் விடுபடக் கூடும்.

'குற்றவாளிகளின் பெயர்கள் வெளியாவதை நாங்கள்தான் தடுத்தோம்' என்று மைத்திரியும் ரணிலும் சமரவீரவும் உளறியிருப்பதற்கு, சில உள்நோக்கங்களும் இருக்கக் கூடும். இப்படிச் சொல்வதன் மூலம், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் மீதான நம்பிக்கையைத் தமிழர்கள் மறுபரிசீலனை செய்யக்கூடும் - என்று கூட அவர்கள் நினைக்கலாம்.

நம்மைப் பொறுத்த வரை, நவநீதம் பிள்ளை என்கிற எங்கள் தென்னாப்பிரிக்கச் சகோதரி மீது வைத்திருந்த நம்பிக்கையை, செயித் அல் ராத் ஹுசெய்ன் மீதும் முழுமையாக வைத்திருக்கிறோம்.

இறையாண்மை, ஒருமைப்பாடு - என்கிற போர்வையில் தப்பித்துவிட முயன்ற இலங்கை என்கிற நச்செலியைப் பிடிக்க பொறி வைத்தவர், நவநீதம் பிள்ளை. அந்தப் பொறியில் அகப்பட்டிருக்கும் இலங்கைக்குக் கிடுக்கிப் பிடி போட்டிருப்பவர், ஹுசெய்ன்.

நடந்த இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வழிவகுத்த நவநீதம் பிள்ளையை, 'புலிப் பிள்ளை' என்றெல்லாம் விமர்சித்தார்கள் சிங்கள அரசியல்வாதிகள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், எடுத்த பணியை நிறைவேற்றினார் பிள்ளை.

'நவநீதம் பிள்ளை (தென்னாப்பிரிக்க) தமிழர் என்பதால்தான் தமிழர்களுக்குச் சாதகமாக இருக்கிறார்' என்று குற்றஞ்சாட்டியது இலங்கை. இன்றைக்கு, தமிழினத்துடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத,

ஹுசெய்ன் என்கிற ஜோர்டானிய அராபியர், பிள்ளையின் அடிச்சுவட்டிலிருந்து அகலாமல், தமிழருக்கான நீதியைப் பெற்றுத்தருவதில் உறுதியோடிருக்கிறார்.

பிள்ளை பஸ் டிரைவரின் மகள், ஹுசெய்ன் மன்னரின் மகன். அந்த வேறுபாட்டை மீறி, இருவருமே மனிதர்கள் என்பதுதான் அவர்களை நம்முடன் இணைத்திருக்கிறது.

இப்படியொரு நிலையில், 'எங்களால்தான் குற்றவாளிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை' என்று மைத்திரி கோஷ்டி முழங்குவதற்கு, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் நம்பகத்தன்மையைச் சிதைப்பதோ, அந்தப் பேரவையைக் கேலி செய்வதோ நோக்கமாயிருக்கலாம்.

நம்முடைய கேள்வியெல்லாம், மைத்திரி கோஷ்டி இப்படி புழுதி வாரித் தூற்றுவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜெனிவாவில் நிற்கிற சட்டத் தரணிகளுக்குத் தெரியுமா தெரியாதா - என்பதுதான்!

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் மூலம் மனித உரிமைகள் ஆணையத்துக்கு அவமதிப்பைத் தேடித்தர முயற்சிக்கும் இலங்கையைக் கண்டிக்கும் முயற்சியில் தமிழர் தரப்பு உடனடியாக இறங்க வேண்டும்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் நடப்புக் கூட்டத்திலேயே, இதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும்.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட முடியாது, தங்கள் விருப்பப்படிதான் அதன் நிகழ்ச்சி நிரல் அமையும் - என்பதை மைத்திரியின் அறிவிப்பு மறைமுகமாக உணர்த்துகிறது.

பெருமை வாய்ந்த ஒரு சர்வதேச அமைப்பை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது.

இரண்டே இரண்டு வழிதான் இருக்கிறது இலங்கைக்கு! ஒன்று - 'ஜனாதிபதியோ பிரதமரோ வெளியுறவுத் துறை அமைச்சரோ அப்படியெல்லாம் பேசவில்லை' என்று மறுக்க வேண்டும். அல்லது, அப்படிப் பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்த இரண்டில் ஒன்றைச் செய்ய இலங்கை தவறினால், மனித உரிமைகள் ஆணையம் தொடர்பாக மைத்திரி பேசியிருப்பது உண்மை தான் என்றாகிவிடும்.

அப்படியொரு நிலையில், குற்றவாளிகளின் பெயர்களை மூடி மறைத்தது ஏன் - என்பதற்கான காரணங்களை மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்க வேண்டியிருக்கும்.....

நடந்த தவறுக்குப் பரிகாரமாக, மூடி மறைத்த குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட வேண்டியிருக்கும். விசாரணை அறிக்கையின் முதல் வடிவம் என்ன, அந்த முதல் அறிக்கையை மாற்றச் சொல்லி நெருக்கடி கொடுத்தவர்கள் யார், அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதையும் விவரிக்க வேண்டியிருக்கும்.

அறிக்கை வெளியாவதற்கு முன் 'இந்த அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக இருக்கும்' என்று ஹுசெய்ன் தெரிவித்திருந்தார்.

இப்போது, அறிக்கையைக் காட்டிலும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது - 'குற்றவாளிகளின் பெயர்களை மறைத்துவிட்டோம்' என்கிற மைத்திரியின் அறிவிப்பு!

“எங்களால்தான் குற்றவாளிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை” என்று சொல்லியிருப்பதன் மூலம், தெரிந்தோ தெரியாமலோ, இலங்கை அரசு குற்றமிழைத்ததை அம்பலப்படுத்தியிருக்கிறார் மைத்திரி.

தான் போட்டிருக்கிற இந்த சேம் சைடு கோலுக்காக அவர் கவலைப்படவே இல்லை. இவ்வளவும் பேசிவிட்டு புத்தனைப் போல புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் கவலைப்படுகிறவர்கள் நாம்தான்! மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை அறிக்கை முழுமையான ஒன்றல்ல - என்பதை உணர்ந்தும்,

நேரடியாகவும் வெளிப்படையாகவும் விசாரிப்பதற்கான வாய்ப்பை சிங்கள இனவாத அரசு மறுத்த நிலையிலும் நடத்தப்பட்ட விசாரணை என்கிற வகையில் தான் அதை மதிக்கிறோம்,

அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அந்த முக்கியத்துவத்துக்கு மைத்திரி கோஷ்டியின் உளறல் உலை வைத்துவிடக் கூடாது என்பதுதான் நமது கவலை.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum