Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


முட்டுக்கட்டையைத் தகர்க்கும் விக்னேஸ்வரன்

Go down

முட்டுக்கட்டையைத் தகர்க்கும் விக்னேஸ்வரன்

Post by oviya on Sun Sep 06, 2015 1:30 pm

ஜனாதிபதி தேர்தல் தோல்வியோ, நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியோ மகிந்த ராஜபக்சவைப் பெரிய அளவில் பாதித்ததாகத் தெரியவில்லை.
பதவி நாற்காலிகளைக் கோட்டை விட்ட பிறகும் - 'சர்வதேச விசாரணையெல்லாம் தேவையில்லை' என்று அறிவிக்க வேண்டிய அளவுக்கு அமெரிக்காவைத் தன்னால் ஆட்டிப்படைக்க முடிவதால், மகிந்த மிருகத்தின் முகத்தில் பரிபூரண மகிழ்ச்சி.

சென்ற ஆண்டு 'சர்வதேச விசாரணை'யை வலியுறுத்திவிட்டு, இந்த ஆண்டு அந்தர் பல்டி அடிப்பது குறித்து அமெரிக்காவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அமெரிக்காவைப் பொறுத்தவரை, சீனாவிடமிருந்து எப்படியாவது பிரித்தாக வேண்டும் இலங்கையை!

அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிற நேரடி ஏஜென்ட் ரணிலையும், சப் ஏஜென்ட் மைத்திரியையும் ராஜபக்சவிடமிருந்து காப்பாற்ற, ஒன்றரை லட்சம் உயிர்களுக்கான நீதியைத் தாரைவார்க்கத் தயாராக இருக்கிறது அமெரிக்கா.

சாம் அங்கிள் தான் இன்றைய தேதியில் சர்வதேச சாணக்கியர் - என்பது நம்மில் சிலரின் வாக்குமூலம். 'அமெரிக்கா இல்லாவிட்டால் எதையுமே சாதித்திருக்க முடியாது' என்பது அவர்களது வாதம்.

இனப்படுகொலை நடந்து முடிந்த இந்த ஆறு ஆண்டுகளில், என்ன சாதித்துக் கிழித்திருக்கிறது அமெரிக்கா? ஒரே ஒரு குற்றவாளியையாவது அடையாளம் காண முடிந்திருக்கிறதா?

ஒரே ஒரு குற்றவாளியையாவது கூண்டில் ஏற்ற முடிந்திருக்கிறதா? இனப்படுகொலையில் நேரடியாக சம்பந்தப்பட்ட கொலைகாரர்களை ராஜதந்திரிகளாக்கி சர்வதேசத்தின் தலையில் திணிக்கும் இலங்கையின் நடவடிக்கைகளை நிறுத்த முடிந்திருக்கிறதா?

ஆறு ஆண்டுகளாக வார்த்தைகளை மாற்றி மாற்றிப் பேசி, இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வாய்ப்பை ஜவ்வு மாதிரி இழுத்தடித்துக் கொண்டே இருந்ததைத் தவிர வேறென்ன செய்திருக்கிறது அமெரிக்கா?

6 ஆண்டுகளாக இழுத்தடித்துவிட்டு, இப்போது - 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் மீண்டும் இழுத்தடிப்போம்' என்று அறிவிப்பது அமெரிக்காவின் ஈவிரக்கமற்ற அராஜகமன்றி வேறென்ன?

2009ல் ஒன்றரை லட்சம் உயிர்களைக் காப்பாற்றத் தவறிய அமெரிக்கா, 2015ல் குற்றவாளியைக் காப்பாற்றத் துடிக்கிறதே - ஏன்? இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தபோது திரும்பிக்கூட பார்க்காத அது,

ஒன்றரை லட்சம் தமிழக்ரளைக் காப்பாற்ற முடியாத அது, கொலைகாரர்களைக் காப்பாற்ற ஏழு மாதத்தில் இரண்டுமுறை நிஷா பிஸ்வாலை இலங்கைக்கு அனுப்புவதற்கு என்ன காரணம்?

இலங்கையில் நடக்கும் ஆட்சிமாற்றத்தால், தமிழருக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்பது நாம் எதிர்பார்த்தது தான். ஆனால், இந்தியாவில் ஆட்சிமாற்றத்தை நம்மில் சிலர் விரும்பினர்.

ஈழத் தமிழருக்கு நீதி கிடைக்க மோடி அரசு துணை நிற்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். தனது பதவியேற்புக்கு ராஜபக்சவும் வந்தால்தான் கவுரதையாக இருக்கும் - என்கிற மோடியின் கழுத்தறுப்பு, அவர்களது எதிர்பார்ப்பில் மண்ணள்ளிப் போட்டது.

சென்ற மார்ச் மாதமே, இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா.மனித உரிமை பேரவை விசாரணை அறிக்கை ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

அப்போது அது வெளியாகிவிடாதபடி தடுத்த முதல் குற்றவாளி - இந்தியாதான்! இரண்டாவது குற்றவாளி தான், அமெரிக்கா.

பொத்தாம் பொதுவாக எங்கள் நாடான இந்தியாவைக் குற்றஞ்சாட்ட நான் விரும்பவில்லை. மகிந்த மிருகத்தைக் காப்பாற்ற முயல்கிற முழு முதற் குற்றவாளி - இந்திய வெளி விவகாரத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் தான் - என்பதை திட்டவட்டமாக, பகிரங்கமாகத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மகிந்த அரசு செய்த இனப்படுகொலையை மூடி மறைப்பதற்காக, சுஷ்மா தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பியது சோனியாவின் தர்பார்.

'நடந்த இனப்படுகொலைக்கு சோனியாதான் காரணம்' என்கிற குற்றச்சாட்டு வலுவடைந்திருந்த நிலையில், 'இயல்பாகத்தான் இருக்கிறது இலங்கை' என்று சான்றிதழ் கொடுக்க,

எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மாவை அனுப்பியது, சோனியாவின் குயுக்தியைக் காட்டியது. சுஷ்மாவுக்கு குயுக்தி குறைச்சல்...... மகிந்தன் கொடுத்த பரிசுப் பொருளிலேயே மனத்திருப்தி அடைந்துவிட்டார்.

இப்போது, தன்னை இலங்கைக்கு அனுப்பிய சோனியாவுடன் குழாயடிச் சண்டையில் ஈடுபட வேண்டிய நிலை சுஷ்மாவுக்கு! 'உன் புருஷன் யோக்கியமா' என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி வார்த்தைகளை வாரி இறைப்பது 'குழாயடிச் சண்டை' இல்லாமல் வேறென்ன?

போபர்ஸ் வழக்கில் குற்றவாளியைக் காப்பாற்றியது யார், போபால் வழக்கில் குற்றவாளியைத் தப்பிக்கவைத்தது யார் என்றெல்லாம் வியர்த்து விறுவிறுக்கப் பேசினார் சுஷ்மா.

அதை எதிர்த்து கோபம் பொங்க குரல் எழுப்பினார் சோனியா. அப்படியொரு நிலையில் கூட அவர்கள் இருவரும் மிக மிக உஷாராகவே பேசினார்கள்.

ராஜீவையும் சோனியாவையும் மற்றெல்லா விஷயங்களிலும் சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்த சுஷ்மாஜி, அவர்களது தமிழின விரோதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. 'இலங்கையின் கூலிப்படையாக இந்தியப் படையை அனுப்பியது யார்,

ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலைக்குப் பின்னணி யார், இனப்படுகொலைக் குற்றவாளியான ராஜபக்சவை சர்வதேசத்தின் பிடியிலிருந்து பெயில் எடுத்தது யார்' என்றெல்லாம் சுஷ்மாஜி கேட்கவும் இல்லை... 'ராஜபக்சவிடம் கைநீட்டிப் பரிசுப் பொருள் வாங்கியது யார்' - என்று சோனியாகாந்தி திருப்பிக் கேட்கவும் இல்லை.

மகிந்த ராஜபக்ச கொடுத்த பரிசுப் பொருள், சுஷ்மாவை அவரது விசுவாசியாகவே இன்றுவரை வைத்திருப்பதைப் பார்க்கும்போதுதான், அந்தப் பரிசுப் பொருள் என்னவாக இருக்கும் என்கிற ஆவல் அதிகரிக்கிறது எனக்கு!

சோனியா - சுஷ்மா மோதல் இந்திய நாடாளுமன்றத்தை குழாயடியாக மாற்றிவிட்டது என்றால், பிரதமர் ரணிலுக்கும் வாசுதேவ நாணயக்கார என்கிற மகிந்தனின் விசுவாசிக்கும் நடந்த மோதல், இலங்கை நாடாளுமன்றத்தை - குழாயடியைக் காட்டிலும் கேவலமானதாக மாற்றிவிட்டது.

நாடாளுமன்றத்தில், விமல் வீரவன்சவைப் பார்த்து, 'இங்கே யாரும் குரங்குபோல நாடகமாட முடியாது' என்று நாகரிகம் பொங்க நக்கலடித்திருக்கிறார், ரணில். மகிந்த விசுவாசி வாசுதேவ நாணயக்கார பேசியபோதும் ரணில் குறுக்கிட, வாசு பொங்கி எழுந்ததாக 'வீரகேசரி' தெரிவிக்கிறது.

'நீ யார் என்னை அமரச் சொல்வதற்கு? நீயா சபாநாயகர்? பைத்தியக்காரனே....' என்று கத்திய வாசு, ரணிலை மீண்டும் மீண்டும் ஒரு கெட்ட வார்த்தையால் திட்டினார்.

ஒவ்வொரு முறை அவர் அந்த கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திய போதும், எதிர்க்கட்சியினர் மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். வாசுவின் வசையைத் தடுக்க சபாநாயகர் முயலவில்லை' என்கிறது வீரகேசரி.

நாடாளுமன்றம் போலில்லாமல் ஓர் உருப்படியான அவையாக இருப்பது, வட மாகாண சபை மட்டுமே! இந்த ஆண்டுத் தொடக்கத்தில், நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அந்த அவையில் முதல்வர் விக்னேஸ்வரன் நிறைவேற்றிய தீர்மானம், உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

இப்போது, குற்றவாளிகளைக் காப்பாற்ற அமெரிக்கா முயற்சி செய்கிற நிலையில், மீண்டும் தனது நிலையை வலியுறுத்தியிருக்கிறது வட மாகாண சபை.

'இலங்கையில் நம்பகமான உள்ளக விசாரணை ஒன்று நடக்க சட்டரீதியான வாய்ப்புகள் இல்லை..... அரசு இயந்திரங்களும் அதற்கு முட்டுக்கட்டையாகத்தான் இருக்கும்...

குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள ஓர் அரசு, அதுதொடர்பாக, தனது அதிகாரிகளை, தானே விசாரிக்க வகை செய்யும் விசாரணைப் பொறிமுறை, நீதிமுறையையே பரிகாசம் செய்வதாக இருக்கும்....

சர்வதேசக் குற்றங்கள் எவை என்று எடுத்துரைக்கவல்ல உள்நாட்டுச் சட்டங்கள் இலங்கையில் இல்லை....

அப்படியிருக்கையில், சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய உள்ளக விசாரணை என்பதும் எந்த விதத்திலும் பயனற்றது....

நம்பகமான சர்வதேசப் பொறிமுறையை உருவாக்கி நீதி கிடைக்க வழிவகுப்பதன் மூலம் அர்த்தமுள்ள நல்லிணக்கம் உருவாக இலங்கையின் புதிய தலைவர்கள் முன்வர வேண்டும்....'

இதெல்லாம் ‘சர்வதேசப் பொறிமுறையின் அவசியம்‘ என்கிற தலைப்பில் நிறைவேற்றப்பட்டிருக்கும் வட மாகாண சபை தீர்மானத்தின் முக்கியப் பகுதிகள்.

தீர்மானத்தின் கடைசி வாக்கியம் தொடர்பில் ஒரு விளக்கம் தேவைப்பட்டது எனக்கு! வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொண்டு, அதுபற்றிப் பேசியபோது.

அந்தக் கடைசி வாக்கியத்தின் முக்கியத்துவம் உண்மையிலேயே வியக்க வைத்தது. விக்னேஸ்வரன் என்கிற மனிதரின் இனம்சார் அறிவுத்திறனை மீண்டும் நாம் அறிந்துகொள்ளக் கிடைத்திருக்கிற வாய்ப்பு இது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் சாசனத்தில் இலங்கை கையெழுத்திடாததால். அந்த நீதிமன்றத்தின் விசாரணை வரம்புக்குள் இலங்கை வராது....

பாதுகாப்பு கவுன்சில் அனுமதித்தால்தான் இலங்கை மீது சர்வதேச விசாரணை சாத்தியம்..... ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவோ அமெரிக்காவோ ‘வீட்டோ பவர்‘ மூலம் அதைத் தடுத்து, இலங்கையைக் காப்பாற்றிவிடும்....

நம்மில் சட்டம் அறிந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு வலம் வருகிற நண்பர்கள் பலரது மேலான கருத்து இது.

இந்த நடைமுறைச் சிக்கலைத் தீர்ப்பது எப்படி, முட்டுக்கட்டையைத் தகர்ப்பது எப்படி, என்பதையெல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்துபார்த்த பிறகே தீர்மானத்தை எழுதியிருக்க வேண்டும் விக்னேஸ்வரன் என்கிற இந்த இனத்தின் முதல்வர்.

ஈழத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ‘சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்‘ ஒன்றை அமைப்பதற்கு சட்டப்படி வழியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது வடமாகாண சபை தீர்மானத்தின் இறுதிப்பகுதி.

அப்படியொரு தீர்ப்பாயத்தை அமைக்கும்படி சர்வதேசத்தை வலியுறுத்துகிறது அது.

‘எதை நோக்கிச் செல்ல வேண்டுமோ, அதை நோக்கிய பயணம்தான் இது. நெடுஞ்சாலையில் போகிறபோது, சாலை பழுதடைந்திருக்கும் இடத்தில், பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக இணைப்புச் சாலை வழியாக மீண்டும் நெடுஞ்சாலையில் போய் இணைந்துவிட முடியும்.

அதைப் போன்றதுதான் இது. சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் என்பது, சர்வதேச விசாரணையிலிருந்து தப்பிக்க முயலும் இலங்கையை சர்வதேசத்தின் பிடிக்குள் கொண்டுவந்துவிடும். அதன்மூலம், உள்ளக விசாரணை என்கிற மூடிமறைப்பு சதியைத் தகர்த்துவிட முடியும்‘ என்கிறார் சிவாஜிலிங்கம்.

சுருக்கமாகச் சொல்வதானால், அமெரிக்காவின் உள்ளக விசாரணை யோசனையைத் தமிழரின் தாயகம் நிராகரிக்கிறது என்பதை வட மாகாண சபை அழுத்தந் திருத்தமாக அறிவித்திருக்கிறது.

நம்பகமான சுதந்திரமான சர்வதேச விசாரணை ஒன்றுதான் நீதி கிடைப்பதற்கான ஒரே வழி - என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ‘சர்வதேச விசாரணையெல்லாம் சாத்தியமில்லை‘ என்று வேதம் ஓதிய வேதாளங்களுக்கு வேட்டு வைத்திருக்கிறது. மாற்று வழி ஒன்று இருப்பதைத் தெள்ளத்தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.

பார்ப்பதற்கு சாது மாதிரி தெரிந்தாலும், முதல்வர் விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளில் விவேகத்துக்கும் குறைவில்லை, வேகத்துக்கும் குறைவில்லை.

ஒரு இக்கட்டான சூழலில் தமிழினத்துக்கு வழிகாட்ட இனம்சார் அறிவுத்திறன் வாய்ந்த ஒருவர் கிடைத்திருப்பது குறித்து நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படலாம், பெருமிதப்படலாம்.

இலங்கையில் சர்வதேச விசாரணை சாத்தியமேயில்லை, உள்ளக விசாரணை மூலம் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாவிட்டாலும் அந்த விசாரணை நடப்பதே எங்களால்தான் என்று பறைசாற்றிக் கொள்ளமுடியும் என்றெல்லாம் யாராவது நினைத்திருந்தால், அவர்களது பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது விக்னேஸ்வரனின் தீர்மானம்.

விக்னேஸ்வரனின் அறிவுத்திறனைப் புரிந்து கொண்டிருக்கிற தமிழீழத் தாயகத்தின் மாணவர்களும் இளைஞர்களும், சர்வதேச விசாரணைதான் தேவை என்பதை வலியுறுத்தி கையெழுத்து வேட்டையில் இறங்கி விட்டனர்.

வவுனியாவில் கையெழுத்து போடும் சகோதரிகளின் முகங்களில், நீதி பெற்றே தீர்வோம் என்கிற ஓர்மம் ஒளிர்கிறது.

அமெரிக்காவின் தயவுடன் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துணைபோகும் நண்பர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகளாக சாணக்கியர்களாக இருந்தாலும், அந்த வவுனியா சகோதரிகளின் கால்தூசுக்குக் கூட இணையாக மாட்டார்கள் என்பதை வேதனையுடனாவது தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

சீனாவைக் காட்டி மிரட்டியே, அமெரிக்காவை வழிக்குக் கொண்டுவந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் மகிந்தனை நிம்மதியாகத் தூங்க விடமாட்டார் போலிருக்கிறது விக்னேஸ்வரன்.

மைத்திரி, ரணில், சுஷ்மா, சாம் அங்கிள் என்று எத்தனைப் பேர் சேர்ந்து காப்பாற்ற முயன்றாலும், விக்னேஸ்வரனிடமிருந்து மகிந்த மிருகத்தைக் காப்பாற்றுவது கஷ்டம் தான் என்று தோன்றுகிறது.

எங்கே பிடித்தீர்கள் இந்த விக்னேஸ்வரனை - என்கிற கேள்வி சம்பந்தா சம்பந்தமில்லாமல் பல இடங்களில் எழுப்பப்படுவதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது.


avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum